‘நாளைய இயக்குனர்’ நிகழ்ச்சி தந்த மாஸ்டர் பீஸ் டைரக்டர்கள் இத்தனை பேரா? முழு லிஸ்ட்
கலைஞர் தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட நாளைய இயக்குனர் நிகழ்ச்சி மூலம் தமிழ் சினிமாவிற்கு பல முத்தான இயக்குனர்கள் கிடைத்திருக்கிறார்கள். அதைப்பற்றி பார்க்கலாம்.

நாளைய இயக்குனர் நிகழ்ச்சி கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அந்நிகழ்ச்சியின் மூலம் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்கிற முனைப்போடு வந்த கார்த்திக் சுப்புராஜ், அஷ்வத் மாரிமுத்து உள்பட ஏராளமான இயக்குனர்கள் தங்கள் குறும்படங்களை திரையிட்டு அதில் அடுத்தடுத்த கட்டத்திற்கு சென்று வெற்றி பெற்றனர்.
அப்படி அந்த நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்துகொண்ட பலர் இன்று தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களாக வலம் வருகிறார்கள் அவர்கள் யார்.. யார் என்பதை பார்க்கலாம்.
கார்த்திக் சுப்புராஜ்
நாளைய இயக்குனர் முதல் சீசனில் பங்கேற்ற பின்னர் சினிமாவில் காலடி எடுத்து வைத்த முதல் இயக்குனர் என்றால் அது கார்த்திக் சுப்புராஜ் தான். அவர் விஜய் சேதுபதி நடித்த பீட்ஸா படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து ரஜினியை வைத்து பேட்ட, தனுஷ் நடித்த ஜெகமே தந்திரம், விக்ரமுடன் மகான், சூர்யா நடித்துள்ள ரெட்ரோ என தொடர்ந்து பல்வேறு முன்னணி நடிகர்களுடன் பணியாற்றி உள்ளார்.
நலன் குமாரசாமி
நாளைய இயக்குனர் சீசன் 1ல் டைட்டில் வின்னர் ஆனவர் நலன் குமாரசாமி. இவர் விஜய் சேதுபதியின் சூது கவ்வும் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து காதலும் கடந்துபோகும் படத்தை இயக்கிய நலன், தற்போது கார்த்தியை வைத்து வா வாத்தியார் என்கிற திரைப்படத்தை இயக்கி உள்ளார்.
அஜய் ஞானமுத்து
நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அஜய் ஞானமுத்து, டிமாண்டி கலானி படம் மூலம் இயக்குனர் ஆனார். பின்னர் இமைக்கா நொடிகள், கோப்ரா, டிமாண்டி காலனி 2 போன்ற வெற்றிப் படங்களை கொடுத்திருந்தார் அஜய்.
பாலாஜி மோகன்
சித்தார்த் நடித்த காதலில் சொதப்புவது எப்படி, துல்கர் சல்மானின் வாயை மூடி பேசவும், தனுஷை வைத்து மாரி மற்றும் மாரி 2 போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் பாலாஜி மோகனும் நாளைய இயக்குனர் நிகழ்ச்சி மூலம் வந்தவர் தான்.
அருண்குமார்
நாளைய இயக்குனர் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்துகொண்டவர் தான் அருண் குமார். இவர் விஜய் சேதுபதி நடித்த பண்ணையாரும் பத்மினியும் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அடுத்ததாக் சிந்துபாத் படத்தை இயக்கி இவர், கடைசியாக சித்தார்த் நடித்த சித்தா என்கிற சூப்பர்ஹிட் படத்தை இயக்கி இருந்தார். தற்போது விக்ரமை வைத்து வீர தீர சூரன் படத்தை இயக்கியுள்ளார் அருண்குமார்.
இதையும் படியுங்கள்... சித்தா பட இயக்குனர் திருமணம்; படையெடுத்து வந்து வாழ்த்திய கோலிவுட்டின் வீர தீர சூரர்கள்!
ராம்குமார்
நாளைய இயக்குனர் நிகழ்ச்சி தமிழ் சினிமாவுக்கு தந்த தரமான இயக்குனர்களில் ராம்குமாரும் ஒருவர். இவர் முண்டாசுப்பட்டி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து ராட்சசன் என்கிற மாஸ்டர் பீஸ் படத்தை கொடுத்த ராம்குமார் தற்போது விஷ்ணு விஷாலை வைத்து புதுப்படம் ஒன்றை இயக்கி வருகிறார்.
அருண் ராஜா காமராஜ்
நடிகர் சிவகார்த்திகேயனின் நண்பரும், இயக்குனருமான அருண் ராஜா காமராஜ், நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் தான் சினிமாவுக்குள் வந்தார். கனா படம் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி என்கிற படத்தை இயக்கினார். இதுதவிர லேபில் என்கிற வெப் தொடரையும் இவர் இயக்கி உள்ளார்.
ரவிக்குமார்
நாளைய இயக்குனர் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்துகொண்டவர் ரவிக்குமார். இதையடுத்து விஷ்ணு விஷால் நடித்த இன்று நேற்று நாளை படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி வெற்றிகண்ட ரவிக்குமார், பின்னர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான அயலான் என்கிற சயின்ஸ் பிக்சன் படத்தை இயக்கினார்.
மடோன் அஸ்வின்
யோகிபாபுவை வைத்து மண்டேலா என்கிற மாஸ்டர் பீஸ் திரைப்படத்தை கொடுத்த மடோன் அஸ்வின், நாளைய இயக்குனர் நிகழ்ச்சி மூலம் சினிமாவுக்கு வந்தவர். மண்டேலா படத்தின் வெற்றிக்கு பின் இவர் இயக்கிய மாவீரன் திரைப்படம் மாபெரும் வெற்றியை ருசித்தது. தற்போது விக்ரம் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்.
நித்திலன் சுவாமிநாதன்
நாளைய இயக்குனர் தமிழ் சினிமாவுக்கு தந்த முத்தான இயக்குனர்களில் நித்திலனும் ஒருவர். இவர் குரங்கு பொம்மை படம் மூலம் அறிமுகமானார். இதையடுத்து விஜய் சேதுபதியை வைத்து நித்திலன் இயக்கிய மகாராஜா திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. அப்படம் சீனாவிலும் வெளியாகி வசூல் சாதனை படைத்தது.
ஸ்ரீகணேஷ்
நாளைய இயக்குனர் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்துகொண்டவர் ஸ்ரீகணேஷ். இவர் 8 தோட்டாக்கள் படம் மூலம் அறிமுகமானார். இதையடுத்து குருதி ஆட்டம் படத்தை இயக்கிய ஸ்ரீகணேஷ், தற்போது சித்தார்த், சரத்குமார் நடிக்கும் 3BHK என்கிற படத்தை இயக்கி வருகிறார்.
அஷ்வத் மாரிமுத்து
கோலிவுட்டுக்கு நாளைய இயக்குனர் நிகழ்ச்சி மூலம் கிடைத்த ஒரு படைப்பாளி தான் அஷ்வத் மாரிமுத்து. இவர் ஓ மை கடவுளே படம் மூலம் அறிமுகமானார். அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதனை வைத்து அஷ்வத் இயக்கிய டிராகன் திரைப்படம் தற்போது பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பி வருகிறது. இவர் அடுத்ததாக சிம்பு படத்தை இயக்க உள்ளார்.
இதையும் படியுங்கள்... மீண்டும் AGS, அஸ்வத், பிரதீப் காம்போவில் புதிய படம் – டிராகன் இயக்குநர் அறிவிப்பு!