நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடிக்கு அடித்த ஜாக்பாட்... கோடிகளை அள்ளிய காதல் ஜோடி...!
நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடியும் அரும்பாடுபட்டு உருவாக்கிய நெற்றிக்கண் திரைப்படமும் இணைந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா 2வது அலை ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக மே 10ம் தேதி முதலே முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில் முக்கியமாக மக்கள் அதிகம் கூடுவதால் திரையரங்குகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் திரையுலகினர் பலரும் மீண்டும் ஓடிடி பக்கம் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். தமிழ் திரையுலகைப் பொறுத்தவரை சிம்பு, ஹன்சிகா நடித்த ‘மஹா’, தனுஷ் நடிப்பில் தயாராகியுள்ள ‘ஜகமே தந்திரம்’ விஜய் சேதுபதி நடிப்பில் உருவான பல படங்கள் ஓடிடியில் வெளியாக தயாராக உள்ளன.
தற்போது அந்த வரிசையில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடியும் அரும்பாடுபட்டு உருவாக்கிய நெற்றிக்கண் திரைப்படமும் இணைந்துள்ளது. இந்த படம் விரைவில் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடித்துள்ள படம் 'நெற்றிக்கண்'. 'அவள்' படத்தின் இயக்குநரான மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நயன்தாராவுடன் அஜ்மல் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் ‘ப்ளைண்ட்’ என்ற கொரியப் படத்தின் அதிகாரபூர்வ ரீமேக் ஆகும். இந்த படத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக நயன்தாரா அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
கடந்த ஆண்டு வெளியான இந்த படத்தின் டீசர் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் நிறுவனம் ரூ. 25 கோடி கொடுத்து படத்தை வாங்கியுள்ளார்களாம். இதனால் நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடிக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. காரணம் படத்தின் தயாரிப்பு செலவை விட இரு மடங்கு லாபம் கிடைத்திருப்பதாக சினிமா வட்டாரங்களில் பேச்சு கிளம்பியுள்ளது.