ஜெயிலர் முதல் தளபதி 67 வரை... கைவசம் அரை டஜன் படங்கள் - வியக்க வைக்கும் அனிருத்தின் லைன் அப் இதோ
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத், கைவசம் விஜய், அஜித், ரஜினி, கமல், ஷாருக்கான் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களை வைத்துள்ளார்.
கொலவெறி என்கிற ஒரே பாடல் மூலம் உலகளவில் பேமஸ் ஆனவர் அனிருத். ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்கிய 3 படத்துக்காக அனிருத் இசையில் தனுஷ் பாடிய இப்பாடல் உலகளவில் வைரல் ஆனது. முதல் பாடலிலேயே கவனம் ஈர்த்த அனிருத், அடுத்தடுத்து விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்தார்.
ஏ.ஆர்.ரகுமானின் சிஷ்யன் ஆன அனிருத், தற்போது தமிழ் சினிமாவில் அவருக்கே போட்டியாக விளங்கி வருகிறார். குறிப்பாக ஏ.ஆர்.ரகுமானை விட தற்போது அனிருத்துக்கு தான் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அனிருத் கைவசம் தற்போது அரை டஜன் படங்கள் உள்ளன. அதில் தமிழில் அவர் இசையமைத்து வரும் படங்களின் லிஸ்ட்டை கேட்டால் தலைசுற்றிவிடும். ஏனெனில் அவர் கைவசம் உள்ள அனைத்துமே முன்னணி நடிகர்களின் படங்கள்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்துக்கு அனிருத் தான் இசையமைத்து வருகிறார். இப்படத்தை நெல்சன் இயக்குகிறார். அடுத்ததாக கமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2 படத்துக்கும் அனிருத் தான் இசையமைக்கிறார். இதுதவிர அஜித்தின் ஏகே 62 மற்றும் விஜய்யின் தளபதி 67 படத்துக்கும் அனிருத் தான் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகி உள்ளார். இது கோலிவுட் நிலவரம்.
இதையும் படியுங்கள்... விஜய்க்கு ஸ்கெட்ச் போட்ட கமல்ஹாசன்... நைசாக ஆண்டவருக்கே டிமிக்கி கொடுத்த தளபதி..!
மறுபுறம் ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் மூலம் பாலிவுட்டிலும் இசையமைப்பாளராக காலடி எடுத்து வைத்துள்ளார் அனிருத். இப்படம் மூலம் இயக்குனர் அட்லீ உடன் முதன்முறையாக கூட்டணி அமைத்துள்ளார் அனிருத். இதுதவிர டோலிவுட்டில் கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் என்.டி.ஆர்.30 படத்துக்கும் அனிருத் தான் இசை.
இப்படி கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என ரவுண்டு கட்டி பணியாற்றி வரும் அனிருத், கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் பாடல்களை கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இளையராஜாவுக்கு அடுத்தபடியாக தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு ஒரே நேரத்தில் இசையமைக்கும் வாய்ப்பு அனிருத்துக்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... அட்ஜஸ்மெண்ட் செய்தால் பட வாய்ப்பு... திரையுலகில் எதிர்கொண்ட கசப்பான அனுபவம் குறித்து மனம்திறந்த நயன்தாரா