'சந்திரமுகி 2' படத்தை பார்த்துவிட்டு விமர்சனம் கூறி பயம் காட்டிய பிரபலம்! என்ன சொன்னார் தெரியுமா?
'சந்திரமுகி 2' படத்தை பார்த்துவிட்டு, பிரபலம் ஒருவர் தன்னுடைய முதல் விமர்சனத்தை சமூக வலைதளத்தில் வெளியிட, அது வைரலாக பார்க்கப்பட்டு வருவதோடு படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.
பிரபல இயக்குனர் பி.வாசு இயக்கத்தில், கடந்த 2005 ஆம் ஆண்டு, வெளியான திரைப்படம் சந்திரமுகி. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளதாக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் அறிவித்த இயக்குனர் பி.வாசு தற்போது தன்னுடைய 65 ஆவது படமாக, 'சந்திரமுகி 2' படத்தை இயக்கி முடித்துள்ளார்.
ரஜினிகாந்த் இரண்டாம் பாகத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து, இப்படத்தில் பிரபல நடன இயக்குனரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடித்துள்ளார். சந்திரமுகி வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா நடித்துள்ளார். மேலும் வைகைப்புயல் வடிவேலு, மஹிமா நம்பியார், லட்சுமிமேனன், சிருஷ்டி டாங்கே, ராதிகா, ரவி மரியா, சுரேஷ் மேனன், உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு, பாகுபலி, RRR படங்களுக்கு இசையமைத்த... ஆஸ்கர் நாயகன் கீரவாணி இசையமைத்துள்ளார். ஆதி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, தோட்டா தரணி கலைப்பணிகளை மேற்கொண்டுள்ளார். ஆண்டனி படத்தொகுப்பு செய்துள்ளார். ராகவா லாரன்ஸின் வழக்கமான ஹாரர் மற்றும் காமெடி ஜர்னரில் உருவாகியுள்ள இந்த படத்தை, லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் பிரம்மாண்ட பொருட் செலவில் தயாரித்துள்ளது.
'சந்திரமுகி 2' படத்தின் ஒட்டுமொத்த ஷூட்டிங் பணிகளும், முடிவடைந்து விட்ட நிலையில்... போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. கீரவாணி சமீபத்தில் தான் இந்த படத்தின் இசை கோர்ப்பு பணிகளை மேற்கொண்டதாக அதிகார பூர்வமாக தெரிவிக்கப்பட்டது. மேலும் விரைவில் இப்படத்தின் இசை வெளியீடு மற்றும் ட்ரைலர் வெளியீட்டு தேதியும் வெளியாகும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் சந்திரமுகி 2 முழு படத்தை பார்த்து விட்டதாக, இசையமைப்பாளர் கீரவாணி தன்னுடைய சமூக வலைதளத்தில் கூறி, தன்னுடைய விமர்சனத்தையும் தெரிவித்துள்ளார். அதில் "சந்திரமுகி 2 படத்தை பார்த்தேன். இந்த படத்தின் கதாபாத்திரங்கள் மரண பயத்தில் பல இரவுகள் தூங்காமல் இருந்திருப்பார்கள். நானும் கடந்த இரண்டு மாதங்களாக, இரவு பகல் தூங்காமல் படத்தின் பிரமிக்க வைக்கும் காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ளேன் என கீரவாணி கூறியுள்ளார். குருகிரண் மற்றும் தன்னுடைய நண்பர் வித்யாசாகர் ஆகியோருக்கு வாழ்த்துக்களையும் இந்த பதிவில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.