#Breaking ‘மாஸ்டர்’ பட இயக்குநருக்கு கொரோனா தொற்று... லோகேஷ் கனகராஜ் ட்வீட்டால் ரசிகர்கள் அதிர்ச்சி!
ஷூட்டிங் மற்றும் பிற பணிகளுக்காக வெளியில் செல்வதாலும் பிரபலங்கள் பலரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.
மார்ச் மாதம் இந்தியாவில் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று, கடந்த சில மாதங்களாக சற்று தணிந்திருந்த நிலையில் மீண்டும் மிகவும் வேகமாக பரவி வருகிறது. எனவே பொதுமக்கள் அனைவரும் முக கவசம் மற்றும் தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பதால் கொரோனா தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள முடியும் என சமூக ஆர்வலர்கள், மருத்துவர்கள், மற்றும் சுகாதார துறை அதிகாரிகளும் வலியுறுத்தி வருகிறார்கள்.
மேலும் ஷூட்டிங் மற்றும் பிற பணிகளுக்காக வெளியில் செல்வதாலும் பிரபலங்கள் பலரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் நடிகர் சூர்யா கொரோனாவால் பாதிக்கப்பட்டு சமீபத்தில் பூரண குணம் அடைந்தது அனைவரும் அறிந்தது தான்.
பாலிவுட்டின் டாப் நடிகரான அமீர்கான், மாதவன் ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேபோல் காமெடி நடிகர் பக்ருவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் லோகேஷ் கனராஜுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விஜய், விஜய்சேதுபதி நடிப்பில் மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ், தற்போது கமல் நடிப்பில் உருவாக உள்ள விக்ரம் படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் தீவிரம் காட்டி வந்தார்.
இதனிடையே உடல் நலக்குறைபாடு ஏற்பட்டதை அடுத்து கொரோனா பரிசோதனை மேற்கொண்ட லோகேஷ் கனகராஜுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், என்னுடைய நண்பர்கள், குடும்பத்தினர், நலம்விரும்பிகள் அனைவருக்கும் எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். விரைவில் நல்ல உடல் நலத்துடன் மீண்டு வருவேன் என பதிவிட்டுள்ளார்.