- Home
- Cinema
- ஒரு நாளைக்கு 200 சிகரெட்... செயின் ஸ்மோக்கராக இருந்த மனோபாலா அதிலிருந்து விடுபட்ட கதை தெரியுமா..!
ஒரு நாளைக்கு 200 சிகரெட்... செயின் ஸ்மோக்கராக இருந்த மனோபாலா அதிலிருந்து விடுபட்ட கதை தெரியுமா..!
நடிகர் மனோபாலா தான் இயக்குனராக உச்சத்தில் இருக்கும்போது ஒரு நாளைக்கு 200 சிகரெட்டுகள் குடிப்பேன் என்று பழைய பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.

நடிகர் மனோபாலா இன்று காலமானார். கல்லீரல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த நிலையில், இன்று அவர் மரணம் அடைந்தார். அவருக்கு தற்போது 69 வயது ஆகிறது. சினிமாவில் நடிகராக 700 படங்களுக்கு மேல் நடித்துள்ள மனோபாலா 24 படங்களை இயக்கியும் உள்ளார். இதில் சிவாஜியின் பாரம்பரியம், ரஜினியின் ஊர்க்காவலன் போன்ற படங்களும் அடங்கும். இதுதவிர சதுரங்க வேட்டை உள்பட சில பிளாக்பஸ்டர் ஹிட் படங்களையும் மனோபாலா தயாரித்துள்ளார்.
மனோபாலா நடிப்பில் ஏராளமான படங்களும் உருவாகி வருகின்றன. அதில் ஒரு படம் தான் நடிகர் விஜய்யின் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் மனோபாலாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் மனோபாலா தான் இயக்குனராக உச்சத்தில் இருக்கும்போது ஒரு நாளைக்கு 200 சிகரெட்டுகள் குடிப்பேன் என்றும் பின்னர் அதிலிருந்து வெளியே வந்தது குறித்தும் மனம் திறந்து பேசி உள்ளார்.
இதையும் படியுங்கள்... கமலின் ஆழ்வார்பேட்டை கேங்கில் அங்கமாக இருந்த மனோபாலா... கடைசி வரை நிறைவேறாமல் போன அவரின் நீண்ட நாள் ஆசை
ஒரு பேட்டியில் மனோபாலா கூறியதாவது : “நான் இயக்குநராக உச்சத்தில் இருந்தபோது எனக்கு பயங்கர சிகரெட் பழக்கம் இருந்தது. அதிகளவில் புகைப்பிடித்ததால் என்னை 'சிம்னி' என்று அழைத்தார்கள். சிகரெட் சாம்பலை தட்டுவதற்காக இந்தி நடிகை ரேகா இரண்டு பான்பராக் பாக்கெட்டுகளை கட்டி என் கழுத்தில் தொங்கவிட்டார். அந்த அளவுக்கு செயின் ஸ்மோக்கராக இருந்தேன். ஒரு நாளைக்கு 200 சிகரெட் பிடிப்பேன். அதனால்தான் என் எலும்புகள் அனைத்தும் பலவீனமானது. ஒரு கட்டத்தில் இனி ஒரு சிகரெட் பிடித்தாலும் நான் இறந்துவிடுவேன் என்று டாக்டர்கள் சொன்னார்கள். அப்போதுதான் சிகரெட் பழக்கத்தை கைவிட்டேன்.
சிகரெட் பழக்கத்தை கைவிட்ட பின் அதன் விளைவுகள் மிகவும் பயங்கரமானவையாக இருந்தன. நான் தெலுங்குப் படமொன்றில் நடித்தபோது, வில்லனுக்குத் தகவல் கொடுக்க ஏறி இறங்கி ஓட வேண்டிய ஒரு கதாபாத்திரத்தை எனக்குக் கொடுத்தார்கள். அது 10-11 டேக்குகளுக்குப் போனால், டயலாக் பேசுவதற்கு முன் நான் மூச்சு விட வேண்டும். ஆனால், இயக்குனர் 'கட்...இன்னும் ஒன்று' சொல்வார். அந்த மூச்சை எடுக்காவிட்டால் நான் உயிருடன் இருக்க மாட்டேன் என்பது அவர்களுக்குத் தெரியாது. அப்போது தான் என் உடலில் சிகரெட் ஏற்படுத்திய தாக்கத்தை உணர்ந்தேன். மெதுவாக எல்லோரிடமும் சிகரெட் பிடிக்காதீர்கள் என்று சொன்னேன். மது கூட அருந்துங்கள், ஆனால் புகைபிடிக்காதீர்கள் எனக் கெஞ்சுவேன். அதற்கு நான் உதாரணம்” என அந்த பேட்டியில் மனோபாலா கூறி இருந்தார்.
இதையும் படியுங்கள்... அன்று அவர் பாராட்டியது என் நெஞ்சில் நிழலாடுகிறது..! மனோபாலா மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்!