- Home
- Cinema
- கமலின் ஆழ்வார்பேட்டை கேங்கில் அங்கமாக இருந்த மனோபாலா... கடைசி வரை நிறைவேறாமல் போன அவரின் நீண்ட நாள் ஆசை
கமலின் ஆழ்வார்பேட்டை கேங்கில் அங்கமாக இருந்த மனோபாலா... கடைசி வரை நிறைவேறாமல் போன அவரின் நீண்ட நாள் ஆசை
நடிகரும், இயக்குனருமான மனோபாலா இன்று மரணமடைந்த நிலையில், அவருக்கு சினிமாவில் நிறைவேறாமல் போன ஆசை பற்றி தற்போது பார்க்கலாம்.

நடிகர் மனோபாலா கடந்த 1953-ம் ஆண்டு டிசம்பர் 8-ந் தேதி கோயம்புத்தூர் அருகே உள்ள சூலூரில் பிறந்தார். அரசு கலைக் கல்லூரியில் ஓவியப் பட்டதாரியான இவர், கமல், மணிரத்னம், சந்தான பாரதி, பி.சி.ஸ்ரீராம், ராபர்ட்-ராஜசேகர் மற்றும் பலர் அடங்கிய புகழ்பெற்ற "ஆழ்வார்பேட்டை" குழுவின் ஒரு பகுதியாக இருந்தார். கமலின் வீடுதான் அவர்களின் தங்குமிடமாக இருந்தது. மனோபாலாவை பாரதிராஜாவுக்கு அறிமுகப்படுத்தியவர் கமல்தான்.
மனோபாலாவுக்கு உஷா மகாதேவன் என்கிற மனைவியும், ஹரீஷ் என்கிற மகனும் உள்ளார். அவர் அமெரிக்காவில் வேலை பார்த்து வருகிறார். அவர் அங்கு பணியாற்றும் போதே அங்கு ஒரு தமிழ் பெண்ணை காதலித்து அவரையே பெற்றோர் சம்மதத்துடன் திருமணமும் செய்து கொண்டார். தற்போது மனோபாலாவின் மகன் ஹரீஷ் தன் மனைவியுடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.
நடிகர் மனோபாலா இன்று திடீரென மரணம் அடைந்தது பலருக்கும் பேரதிர்ச்சியாக உள்ளது. அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், மனோபாலாவுக்கு சினிமாவில் நிறைவேறாமல் போன ஆசைப்பற்றி தற்போது பார்க்கலாம்.
இதையும் படியுங்கள்... அருமை நண்பா என கலங்கிய ரஜினி... மனோபாலா மறைவுக்கு கண்ணீர்மல்க இரங்கல் தெரிவித்த பிரபலங்கள்
தமிழ் சினிமாவில் கனவு படமாக இருந்தது பொன்னியின் செல்வன். எம்.ஜி.ஆர் தொடங்கி கமல்ஹாசன் வரை பல்வேறு ஜாம்பவான் இயக்குனர்கள் பொன்னியின் செல்வனை படமாக எடுக்க ஆசைப்பட்டு இருந்தனர். ஆனால் அது நிறைவேறாமலே இருந்தது. இறுதியாக மணிரத்னம் தான் தமிழ் சினிமாவின் நீண்ட நாள் கனவை நனவாக்கினார். பொன்னியின் செல்வன் முதல் பாகம் கடந்த ஆண்டும், இரண்டாம் பாகம் கடந்த வாரமும் ரிலீசாகி அமோக வரவேற்பை பெற்று வருகின்றன.
இந்த பொன்னியின் செல்வனை எடுக்க முயன்ற இயக்குனர்களில் மனோபாலாவும் ஒருவர். பொன்னியின் செல்வன் கதையின் மீது தீராத காதல் கொண்டிருந்த மனோபாலா அப்படத்தை எடுக்க மூன்றுமுறை முயற்சித்தாராம். அந்த மூன்று முறையும் அவரது முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளன. இப்படி மிகவும் ஆசைப்பட்டு படமாக்க முயன்ற இந்தக் கதையை கடைசி வரை தன்னால் எடுக்க முடியாமல் போனது தனக்கு வருத்தம் அளித்ததாக மனோபாலாவே ஒரு பேட்டியில் கூறி இருந்தார்.
இதையும் படியுங்கள்... மனோ பாலாவுக்கு என்ன பிரச்சனை? மரணத்திற்கான காரணம் தெரியுமா... வெளியான ஷாக்கிங் தகவல்!