- Home
- Cinema
- இரண்டே நாளில் ரூ.150 கோடியை தாண்டிய வசூல்.... பாக்ஸ் ஆபிஸில் பண மழை பொழியும் பொன்னியின் செல்வன்
இரண்டே நாளில் ரூ.150 கோடியை தாண்டிய வசூல்.... பாக்ஸ் ஆபிஸில் பண மழை பொழியும் பொன்னியின் செல்வன்
மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளியாகி உள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம், அதிவேகமாக ரூ.150 கோடி வசூலைக் கடந்த தமிழ் படம் என்கிற சாதனையை படைத்துள்ளது.

தமிழ் சினிமாவின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன், 60 ஆண்டுகால முயற்சிக்கு பின் தற்போது வெற்றிகரமாக திரைவடிவம் கண்டுள்ளது. இதனை சாத்தியமாக்கி காட்டியது மணிரத்னம் தான். பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த மாதம் 30-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் பான் இந்தியா படமாக ரிலீசானது.
வெளியானது முதல் அமோக வரவேற்பை பெற்று வரும் இப்படம், பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் மழை பொழிந்து வருகிறது. அதன்படி இப்படம் முதல் நாளில் ரூ.80 கோடிக்கு மேல் வசூலித்து இருந்தது. முதல் நாளில் அதிக வசூல் ஈட்டிய தமிழ் படமாக பொன்னியின் செல்வன் இருந்தாலும், தமிழ்நாட்டில் அதிக வசூல் ஈட்டிய படம் என்ற சாதனையை இப்படம் முறியடிக்கவில்லை.
இதையும் படியுங்கள்... வந்தியத்தேவன் அப்படிப்பட்ட ஆள் கிடையாது... தவறாக சித்தரித்துள்ளதாக பரபரப்பு புகார் - சிக்கலில் மணிரத்னம்
தமிழ் நாட்டில் அதிக வசூல் ஈட்டிய படங்கள் லிஸ்ட்டில் அஜித்தின் வலிமை மற்றும் விஜய்யின் பீஸ்ட் ஆகிய படங்கள் முதல் இரண்டு இடத்தில் நீடிக்கின்றன. முதல் நாளில் தமிழகத்தில் ரூ.27 கோடி வசூலித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் மூன்றாவது இடத்தில் தான் உள்ளது. இருப்பினும் வெளிநாட்டில் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.
குறிப்பாக அமெரிக்காவில் மட்டும் இப்படம் முதல் நாளில் ரூ.17 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாவது நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் இரண்டு நாட்களில் உலகளவில் ரூ.150 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்மூலம் அதிவேகமாக ரூ.150 கோடியை கடந்த தமிழ் படம் என்கிற சாதனையை பொன்னியின் செல்வன் படைத்துள்ளது.
இதையும் படியுங்கள்... பொன்னியின் செல்வன் படத்தின் டிக்கெட் 1200 ரூபாயா?.. இதென்ன பகல் கொள்ளையா இருக்கே - எந்த ஊரில் தெரியுமா?