- Home
- Cinema
- காந்தக்குரலுக்கு சொந்தக்காரர்!! ‘தில்’லாக அறிமுகமாகி இசையுலகில் சிங்கநடை போட்ட மாணிக்க விநாயகத்தின் இசை பயணம்
காந்தக்குரலுக்கு சொந்தக்காரர்!! ‘தில்’லாக அறிமுகமாகி இசையுலகில் சிங்கநடை போட்ட மாணிக்க விநாயகத்தின் இசை பயணம்
பிரபல பின்னணி பாடகரும், நடிகருமான மாணிக்க விநாயகம் உடல்நலக்குறைவால் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 73. இவர் தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் 800-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

தனித்துவமான குரல்வளத்தை கொண்டவர் மாணிக்க விநாயகம். தமிழ் சினிமாவில் பல்வேறு சூப்பர் ஹிட் பாடல்களை இவர் பாடி உள்ளார். அவற்றை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
விக்ரம் நடிப்பில் கடந்த 2001-ம் ஆண்டு வெளியான தில் படத்தின் மூலம் மாணிக்க விநாயகம் தமிழ் திரையுலகில் பாடகராக அறிமுகமானார். தரணி இயக்கிய இப்படத்தில் இடம்பெறும் ‘கண்ணுக்குள்ள கெளுத்தி’ என்கிற பாடலை பாடியதன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார் மாணிக்க விநாயகம்.
இதையடுத்து ஷியாம் நடிப்பில் வெளியான இயற்கை படத்தில் இடம்பெறும் ’காதல் வந்தால் சொல்லி அனுப்பு’ என்கிற பாடலும் மாணிக்க விநாயகம் பாடியது தான். காதல் தோல்வியின் வலியை கேட்பவர்களும் உணரும் வண்ணம் தன்னுடைய குரலின் மூலம் கடத்தி இருப்பார் மாணிக்க விநாயகம்.
அதேபோல் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் இவர் பாடிய ’விடைகொடு எங்கள் நாடே’ என்கிற பாடல் இன்றளவும் கேட்டால் சிலிர்ப்பை ஏற்படுத்தும். இப்பாடலை எம்.எஸ்.விஸ்வநாதன் உடன் இணைந்து பாடி இருந்தார் மாணிக்க விநாயகம்.
பின்னர் லிங்குசாமி இயக்கத்தில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான ‘தேரடி வீதியில்’ என்கிற பாடலை பாடி இருந்தார் மாணிக்க விநாயகம். இந்த பாடல் வெளியான சமயத்தில் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டானது.
இதுதவிர பேரரசு இயக்கத்தில் விஜய் நடித்த திருப்பாச்சி படத்தில் இடம்பெறும் ‘கட்டு கட்டு கீர கட்டு’ என்கிற பாடலை பாடியவரும் மாணிக்க விநாயகம் தான். மேலும் பருத்திவீரன் படத்தில் இடம்பெறும் ரொமாண்டிக் பாடலான ‘ஐயய்யோ’ பாடல் இவரின் குரல்மூலம் ரசிகர்கள் மனதில் ஓங்கி ஒலித்தது என்றே சொல்லலாம்
இதுதவிர சந்திரமுகி படத்தில் இடம்பெறும் ‘கொக்கு பற பற’, சிலப்பதிகாரம் படத்திற்காக ‘மன்னார்குடி கலகலக்க’ என்கிற பாடலையும், சிங்கம் படத்திம் ஓப்பனிங் சாங்கான ‘நானே இந்திரன்’ என்கிற பாடல் உள்பட ஏராளாமான ஹிட்பாடல்களை பாடியுள்ளார் மாணிக்க விநாயகம்.
இவ்வாறு எண்ணற்ற ஹிட் பாடல்களை கொடுத்த மாணிக்க விநாயகம், இன்று உடல்நலக்குறைவால் காலமாகி உள்ளது இசை ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இத்தகைய அறிய கலைஞனை இழந்துவிட்டோமே என ரசிகர்கள் பலரும் வருந்துகின்றனர்.