பைசன் படம் பார்த்து மணிரத்னம் சொன்ன ரிவ்யூ... டக்குனு எமோஷனல் ஆன மாரி செல்வராஜ்..!
'பைசன்' திரைப்படத்தை பார்த்த இயக்குநர் மணிரத்னம், இது போன்ற குரல்கள் இங்கு இருப்பது முக்கியம் என்றும், மாரி செல்வராஜ் குறித்து பெருமைப்படுவதாகவும் கூறி இருக்கிறார்.

Mani Ratnam Bison review
சாதிய அடக்குமுறைகள் மற்றும் அநீதிகளை கபடி போட்டியின் பின்னணியில் சொல்லும் திரைப்படம் தான் பைசன், திருநெல்வேலியில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. தேசிய கபடி வீரரும் அர்ஜுனா விருது பெற்றவருமான மனதி கணேசனின் வாழ்க்கையிலிருந்து இப்படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. அனுபமா பரமேஸ்வரன் பைசன் படத்தில் நாயகியாக நடித்துள்ளார். மேலும், கர்ணன் பட நடிகை ரெஜிஷா விஜயனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
பைசன் பட வசூல்
இதுதவிர லால், பசுபதி, அமீர், அழகம்பெருமாள், அருவி மதன், அனுராக் அரோரா போன்றோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் கபடி வீரராக துருவ் விக்ரம் வருகிறார். ஸ்போர்ட்ஸ் டிராமா வகையைச் சேர்ந்த இந்தப் படம், விமர்சன ரீதியான பாராட்டையும் பெற்று வருகிறது. எழில் அரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். நிவாஸ் கே. பிரசன்னா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். உலகளவில் ரூ.55 கோடிக்கு மேல் பைசன் இதுவரை வசூலித்துள்ளது. பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம் பைசன் படத்தை தயாரித்துள்ளது.
பைசனை பாராட்டிய மணிரத்னம்
பைசன் படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் பாராட்டு மழை பொழிந்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் தமிழ் சினிமாவின் லெஜண்டரி இயக்குனரான மணிரத்னம், பைசன் படத்தை பார்த்து இயக்குனர் மாரி செல்வராஜை பாராட்டி இருக்கிறார். அவர் என்ன சொன்னார் என்பதை தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் மாரி செல்வராஜ். அதன்படி 'பைசன்' படத்தைப் பார்த்தேன், உங்கள் படத்தைப் பார்த்து பெருமைப்படுகிறேன், எனக்கு அது மிகவும் பிடித்திருந்தது, மாரி செல்வராஜ் தான் உண்மையான பைசன்' என்று மணிரத்னம் கூறினாராம், மேலும் இங்கே அத்தகைய குரல்கள் இருப்பது முக்கியம் என்றும் சொன்னாராம் மணிரத்னம்.
மாரி செல்வராஜ் ரிப்ளை
இயக்குனர் மணிரத்னத்திற்கு நன்றி தெரிவித்து மாரி செல்வராஜ் போட்டுள்ள பதிவில், பரியேறும் பெருமாளிலிருந்து என் படைப்புகள் அத்தனையையும் பார்த்து, கவனித்து பாராட்டி என்னை ஊக்கப்படுத்தும் உங்கள் அத்தனை வார்த்தைகளுக்கும் என் நன்றியும் பேரன்பும் எப்போதும் சார் என பதிவிட்டுள்ளார். பைசன் திரைப்படம் மாரி செல்வராஜின் 5வது படமாகும், இதுவரை அவர் இயக்கத்தில் வெளிவந்த அனைத்து படங்களுமே பிளாக்பஸ்டர் ஹிட்டாகி இருந்தன. அந்த வரிசையில் பைசனும் இணைந்துள்ளது. துருவ் விக்ரமிற்கு இது முதல் வெற்றிப் படம் என்பது குறிப்பிடத்தக்கது.