கோலிவுட்டின் ‘தீராத விளையாட்டு பிள்ளை’ விஷால் சந்தித்த காதல் சர்ச்சைகள் ஒரு பார்வை!
நடிகர் விஷால் சாய் தன்ஷிகாவை காதலிப்பதாக அறிவித்துள்ள நிலையில், இதற்கு முன் அவரைப் பற்றி வெளிவந்த காதல் சர்ச்சைகள் பற்றி பார்க்கலாம்.

Vishal Love Controversies
தமிழ் திரையுலகில் முன்னணி மாஸ் நடிகராக வலம் வருபவர் விஷால். இயக்குனராக வேண்டும் என்கிற கனவோடு இருந்த விஷால், ஆக்ஷன் கிங் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். பின்னர் எதிர்பாரா விதமாக கடந்த 2004-ம் ஆண்டு வெளிவந்த செல்லமே படம் மூலம் நடிகராக அறிமுகமானார். அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கிய விஷால், தொடர்ந்து தாமிரபரணி, சண்டக்கோழி, திமிரு என ஹிட் படங்களை கொடுத்து நட்சத்திர அந்தஸ்தை பெற்றார். விஷாலின் 20 ஆண்டு திரை வாழ்க்கையில் அவர் பல்வேறு காதல் சர்ச்சையில் சிக்கி உள்ளார். அதைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
விஷால் - வரலட்சுமி
நடிகர் விஷாலும், நடிகை வரலட்சுமியும் காதலித்தது கோலிவுட்டுக்கே தெரியும். இருவரும் மதகஜராஜா படத்தில் பணியாற்றியபோது காதலித்து வந்தனர். ஆனால் நாளடைவில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரேக் அப் செய்து பிரிந்துவிட்டனர். விஷால் உடனான காதல் முறிவுக்கு பின்னர் நிகோலாய் என்பவரை திருமணம் செய்துகொண்டார் வரலட்சுமி.
விஷால் - லட்சுமி மேனன்
ஹீரோக்கள் ஒரே ஹீரோயின் உடன் இரண்டு படங்கள் தொடர்ச்சியாக ஜோடி சேர்ந்து நடித்தாலே அவர்களைப் பற்றிய காதல் கிசுகிசுக்கள் உலாவத் தொடங்கும். அப்படி தான் பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன் என இரண்டு படங்களில் விஷாலுக்கு ஜோடியாக நடித்த லட்சுமி மேனன் காதல் சர்ச்சையில் சிக்கினார். பின்னர் இருவருமே அது வெறும் வதந்தி என மறுத்தனர்.
விஷால் - கீர்த்தி சுரேஷ்
நடிகர் விஷாலும் கீர்த்தி சுரேஷும் சண்டக்கோழி 2 திரைப்படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர். அந்த சமயத்தில் விஷாலுக்காக கீர்த்தி சுரேஷை பெண் கேட்டு சென்றதாக இயக்குனர் லிங்குசாமியே பேட்டி ஒன்றில் கூறி இருந்தார். ஆனால் கீர்த்தி நோ சொல்லிவிட்டாராம். கடந்த ஆண்டு தான் கீர்த்திக்கு திருமணம் ஆனது.
விஷால் - அனிஷா ரெட்டி
நடிகர் விஷால், ஐதராபாத்தை சேர்ந்த அனிஷா ரெட்டி என்பவரை காதலித்து வந்த நிலையில், இவர்கள் இருவருக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நிச்சயம் ஆனது. ஆனால் அதன் பின்னர் விஷால் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திருமணத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டார் அனிஷா ரெட்டி.
விஷால் - அபிநயா
விஷால் உடன் காதல் கிசுகிசுவில் சிக்கிய மற்றொரு நடிகை அபிநயா. நாடோடிகள் உள்பட பல படங்களில் நடித்துள்ள அபிநயா, விஷாலுக்கு ஜோடியாக மார்க் ஆண்டனி படத்தில் நடித்திருந்தார். அண்மையில் அபிநயா தான் காதல் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக அறிவித்தபோது அவர் விஷாலை தான் திருமணம் செய்துகொள்ள உள்ளார் என்றெல்லாம் பேச்சு அடிபட்டது. பின்னர் தான் அது வெறும் வதந்தி என தெரியவந்தது.