கனவு படம் முதல் லியோ ஆடியோ லாஞ்ச் வரை... அப்டேட்டுகளை அள்ளித்தெளித்த லோகேஷ் கனகராஜ் - முழு விவரம் இதோ
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், தன்னுடைய கனவு படத்தின் கதையை 10 ஆண்டுகளாக எழுதி வருவதாக கூறி இருக்கிறார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். மாநகரத்தில் தொடங்கிய இவரது பயணம், அடுத்தடுத்து கைதி, மாஸ்டர், விக்ரம் என பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து பாலிவுட் நடிகர்களே இவரின் கால்ஷீட்டிற்காக காத்திருக்கும் அளவுக்கு அசுர வளர்ச்சி கண்டுள்ளார் லோகேஷ். இவர் இயக்கத்தில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி உள்ளது. விஜய் நாயகனாக நடித்துள்ள இப்படம் வருகிற அக்டோபர் மாதம் திரைக்கு வர உள்ளது.
லியோ படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி பணிகள் படு ஜோராக நடைபெற்று வருகிறது. லியோ படத்தை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் லோகேஷ். இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகளும் ஒருபக்கம் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கோவையில் நடைபெற்ற கல்லூரி விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார் லோகேஷ் கனகராஜ். அப்போது மாணவர்கள் கேட்ட கேள்விக்கும், பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்து பேசி உள்ளார்.
அதன்படி லோகேஷின் கனவு திரைப்படம் பற்றி மாணவர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த லோகேஷ், இரும்புக்கை மாயாவி தான் தன்னுடை கனவு படம் என்றும் அப்படத்தின் கதையை 10 ஆண்டுகளுக்கு மேலாக எழுதி வருவதாகவும் கூறி உள்ளார். சூர்யாவை வைத்து இப்படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார் லோகேஷ்.
அதேபோல் 10 படங்களை இயக்கியதும் சினிமாவை விட்டு விலகிவிடுவீர்கள் என்று கூறுகிறார்களே, அது உண்மையா என கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த லோகேஷ், நிறைய படங்கள் பண்ண வேண்டும் என்கிற பெரிய எண்ணம் எனக்கில்லை. 10 படம் பண்ண வேண்டும் என்பது தான் ஆசை. பத்தாவது படத்தோடு சினிமாவை விட்டு விலகிவிடுவேன் என கூறி உள்ளார்.
இதையடுத்து லியோ படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது ரிலீஸ் ஆகும் என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த லோகேஷ், செகண்ட் சிங்கிள் ரிலீஸ் ஆக லேட் ஆகும் என தெரிவித்தார். அதேபோல் வருகிற செப்டம்பர் மாதம் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்தப்படும் என கூறி உள்ளார்.
லோகேஷ் படத்தில் ஹீரோயின்களை கொன்றுவிடுவார் என்கிற புகார் தொடர்ந்து இருந்து வந்தது. அதனால் லியோ படத்தில் திரிஷாவுக்கு என்ன பண்ணி வச்சிருக்கீங்க என மாணவர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, திரிஷாவுக்கு எதுவும் ஆகாது என பதில் அளித்துள்ளார் லோகி.
அதேபோல் உங்களுடைய ரோல் மாடல் யார் என மாணவர் ஒருவர் கேட்டதும், சட்டென கமல்ஹாசன் என பதிலளித்தார் லோகேஷ்.
விஜய்யுடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைப்பீர்களா என்கிற கேள்விக்கு பதிலளித்த லோகேஷ், விஜய் அண்ணா கண் அசைச்சா ஓடி வந்திருவேன் என கூறி உள்ளார்.
இதையும் படியுங்கள்... 'ப்ராஜெக்ட் கே' படத்திற்காக அமெரிக்கா சென்ற கமல்ஹாசன்! வைரலாகும் ஸ்டைலிஷ் புகைப்படம்!