ரசிகர்கள் எதிர்பார்ப்புக்கு என்னால படம் எடுக்க முடியாது... லோகேஷ் கனகராஜ் ஓபன் டாக்
கூலி பட ரிலீசுக்கு பின்னர் முதன்முறையாக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ரசிகர்கள் எதிர்பார்ப்புக்கு என்னால் படம் எடுக்க முடியாது என கூறி இருக்கிறார்.

Lokesh Kanagaraj Interview
தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர் என்றால் அது லோகேஷ் கனகராஜ் தான். இவர் கடைசியாக இயக்கிய கூலி படத்திற்காக ரூ.50 கோடி சம்பளம் வாங்கி இருந்தார். தொடர்ச்சியாக 5 ஹிட் படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ், லியோ வரை எந்த படத்திற்கும் பெரியளவில் ட்ரோல் செய்யப்பட்டதில்லை. ஆனால் அண்மையில் வெளியான கூலி படத்திற்காக அவர் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டார். படத்தில் உள்ள லாஜிக் ஓட்டைகளை குறிப்பிட்டு, அவரை ட்ரோல் செய்தனர். இருந்தாலும் படம் பாக்ஸ் ஆபிஸில் 500 கோடிக்கு மேல் வசூலித்துவிட்டது.
லோகேஷ் கனகராஜ் பேட்டி
கூலி பட ரிலீசுக்கு பின்னர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட லோகேஷ் கனகராஜ், அதில் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துகொண்டார். அதன்படி, அவர் கூறியதாவது : ரசிகர்களோட எதிர்பார்ப்பு தான் என்னை இங்கு உட்கார வைத்திருக்கிறது. இந்த எதிர்பார்ப்பு இல்லேனா நாங்க சினிமா பண்ண முடியாது. அதை நாங்கள் குறை சொல்லவும் முடியாது. உதாரணத்துக்கு கூலி படத்தை எடுத்துக் கொண்டால், நாங்க அது டைம் டிராவல் படம்னு சொல்லல, எல்சியூல இருக்குனும் சொல்லல, ஆனால் அதெல்லாம் அவங்களாக சொன்னார்கள். படம் ரிலீஸ் ஆகும் முன் 18 மாசம் நான் எவ்ளோ தூரம் மறைச்சு வைக்க முடியுமோ வச்சிருந்தோம்.
ரசிகர்கள் எதிர்பார்ப்புக்கு படம் பண்ண மாட்டேன்
ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நம்மால் மறைக்க முடியாது. ஒவ்வொரு நாளும் ரஜினி சார் படம் இப்படி இருக்கும், லோகேஷ் படம் இப்படி இருக்கும் என நினைச்சு பேசுறாங்க. அதை தடுக்க முடியாது. ஆனால் நான் ஒருபோதும் ஆடியன்ஸின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய படம் எடுக்க மாட்டேன். கதையும் அவ்வாறு எழுத மாட்டேன். நான் ஒரு கதை எழுதுகிறேன், அது ஆடியன்ஸின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தால் நல்லது. அதுவே அவர்களை திருப்திபடுத்தவில்லை என்றால், அடுத்த படத்தில் முயற்சி செய்வேன் என கூறி இருக்கிறார்.
அனிருத் இல்லாம இனி என்னுடைய படம் இருக்காது
தொடந்து பேசிய அவர், சக்சஸ் என்பது பாக்ஸ் ஆபிஸில் கோடி கோடியாய் வசூலைக் கொடுப்பது அல்ல, ஒரு படத்தை வெற்றிகரமாக எடுத்து முடித்து மக்களுக்கு காட்டிவிட்டாலே அது சக்சஸ் தான். பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்பது தயாரிப்பாளர்களுக்கானது. அதேபோல் இனி அனிருத் இல்லாமல் தான் படம் எடுக்கவே மாட்டேன் என்றும் லோகேஷ் கனகராஜ் திட்டவட்டமாக கூறி இருக்கிறார். இதன்மூலம் கைதி 2 படத்துக்கும் அனிருத் தான் இசையமைப்பார் என கூறப்படுகிறது. கைதி முதல் பாகத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்து இருந்தார். அப்படத்திற்கு பின் லோகேஷ் இயக்கிய அனைத்து படங்களுக்குமே அனிருத் தான் இசையமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.