- Home
- Cinema
- சன் பிக்சர்ஸின் கோரிக்கை நிராகரிப்பு... கூலி படத்தின் வசூல் வேட்டைக்கு செக் வைத்த நீதிமன்றம்
சன் பிக்சர்ஸின் கோரிக்கை நிராகரிப்பு... கூலி படத்தின் வசூல் வேட்டைக்கு செக் வைத்த நீதிமன்றம்
கூலி படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டதை எதிர்த்து சன் பிக்சர்ஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், அதில் அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

Coolie UA Certificate Appeal
ரஜினிகாந்த் நடித்த லோகேஷ் கனகராஜின் 'கூலி' படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கியதை எதிர்த்து, படத்தின் தயாரிப்பாளர்களான சன் பிக்சர்ஸ் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். சமீபத்தில் வெளியான தமிழ் படங்களுடன் ஒப்பிடும்போது 'கூலி' படத்தில் வன்முறை காட்சிகள் குறைவு என்றும், படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் தயாரிப்பாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். 'ஏ' சான்றிதழ் காரணமாக, ரஜினியின் ரசிகர்களான குழந்தைகள் படத்தைப் பார்க்கும் வாய்ப்பை இழக்கின்றனர் என்றும், கே.ஜி.எஃப், பீஸ்ட் போன்ற படங்களுக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது என்றும் தயாரிப்பாளர்கள் சுட்டிக்காட்டி இருந்தனர். இந்த மனுவை நீதிபதி தமிழ் செல்வி விசாரித்தார்.
சன் பிக்சர்ஸ் வழக்கு தள்ளுபடி
இந்த வழக்கில் சென்சார் போர்டு தரப்பில் ஆஜரான சுந்தரேசன், படத்தில் இடம்பெற்ற வன்முறைக் காட்சிகளை நீக்கிவிட்டு, மறு தணிக்கைக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனக் கூறினார். இந்த நிலையில், இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கூலி பட தயாரிப்பு தரப்பில் முன்வைத்த கோரிக்கையை ஏற்க மறுத்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனால் கூலி படம் தொடர்ந்து ஏ சான்றிதழ் உடன் தான் திரையிடப்பட உள்ளது. இதனால் இனி வசூல் அதிகரிக்கவும் வாய்ப்பு இருக்காது என தெரிகிறது.
500 கோடி வசூலித்த கூலி
முதல் நாளில் இருந்தே கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் கூலி திரைப்படம் வசூலில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. வெளியான 14 நாட்களில் 500 கோடி வசூலைப் இப்படம் பெற்றுள்ளது. லோகேஷின் முந்தைய படங்களை விட 'கூலி' படத்திற்கு அதிக விமர்சனங்கள் எழுந்தன. ரஜினிகாந்துடன், பாலிவுட் நட்சத்திரம் ஆமிர் கான், நாகார்ஜுனா, மலையாளத்தில் இருந்து சௌபின் ஷாஹிர், உபேந்திரா, ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பெரிய நட்சத்திரப் பட்டாளமே படத்தில் நடித்திருந்தனர். அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்த இப்படத்திற்கு கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
லோகேஷின் சாதனை
தனித்த கதையம்சம் கொண்ட படம் என்பதால், எல்.சி.யு. படங்களைப் போல சிறப்பாக இல்லை என்ற விமர்சனமும் எழுந்துள்ளது. 500 கோடி வசூலைப் பெற்றதன் மூலம், விக்ரம், லியோ படங்களைத் தொடர்ந்து, தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக 450 கோடி வசூலைப் பெற்ற இயக்குனர் என்கிற பெருமையை லோகேஷ் கனகராஜ் பெற்றிருக்கிறார்.