- Home
- Cinema
- இண்டஸ்ட்ரி ஹிட் அடித்த லோகா திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போ? படக்குழு கொடுத்த அடிபொலி அப்டேட்
இண்டஸ்ட்ரி ஹிட் அடித்த லோகா திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போ? படக்குழு கொடுத்த அடிபொலி அப்டேட்
கல்யாணி ப்ரியதர்ஷன் நடிப்பில் வெளியாகி மலையாள திரையுலகில் இண்டஸ்ட்ரி ஹிட் அடித்த லோகா சாப்டர் 1 சந்திரா திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆவது பற்றிய அப்டேட் வெளியாகி உள்ளது.

Lokah OTT Release Delayed
துல்கரின் வேஃபெரர் ஃபிலிம்ஸ் தயாரித்த ஏழாவது படமான "லோகா - சாப்டர் ஒன்: சந்திரா" சமீபத்தில் மலையாளத்தின் புதிய இண்டஸ்ட்ரி ஹிட்டாக மாறியது. 267 கோடி ரூபாய் உலகளாவிய வசூலுடன் இந்த வரலாற்று சாதனையை படைத்த இப்படம், திரையரங்குகளில் இன்னும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், இப்படம் இப்போதைக்கு ஓடிடியில் வெளியாகாது என படக்குழுவினர் தெளிவுபடுத்தியுள்ளனர். படம் திரையரங்குகளில் தொடர்ந்து ஓடும். படத்திற்கு பெரும் ரசிகர் ஆதரவு கிடைத்து வருகிறது.
வசூல் சாதனை படைத்த லோகா
கேரளா, வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளுடன் படம் ஓடுகிறது. நான்காவது வாரத்திலும் கேரளாவில் அதிக திரையரங்குகளில் படம் வெற்றிகரமாக ஓடுகிறது. வெளியான 24 நாட்களில் இப்படம் மலையாள சினிமாவின் ஆல்-டைம் ரெக்கார்டு வசூலை எட்டியது. மலையாளம் மட்டுமல்ல, தென்னிந்திய சினிமா வரலாற்றிலேயே ஒரு கதாநாயகி டைட்டில் ரோலில் நடித்த படம் பெற்ற மிகப்பெரிய உலகளாவிய வசூல் இதுவாகும். கல்யாணி பிரியதர்ஷன், நஸ்லென் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த இந்த பிரம்மாண்ட ஃபேன்டஸி படத்தை டொமினிக் அருண் எழுதி இயக்கியுள்ளார்.
லோகா சினிமாடிக் யூனிவர்ஸ்
கேரளாவின் புகழ்பெற்ற புராணக்கதைகளில் ஒன்றான கள்ளியங்காட்டு நீலியின் கதையை தழுவி டொமினிக் அருண் உருவாக்கிய "லோகா", தற்போது இந்திய சினிமாவில் விவாதிக்கப்படும் ஒரு படமாக மாறியுள்ளது. ஐந்து பாகங்கள் கொண்ட ஒரு பிரம்மாண்ட ஃபேன்டஸி சினிமாடிக் யுனிவர்ஸ் இந்த படத்தின் மூலம் தொடங்கப்பட்டுள்ளது. கேரளாவில் மட்டுமல்லாமல், மற்ற இந்திய சந்தைகளிலும் இப்படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. மற்ற இந்திய சந்தைகளில் இருந்து மட்டும் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது.
லோகா படக்குழு
இப்படத்தில் கல்யாணி, நஸ்லென் ஆகியோரின் சிறப்பான நடிப்புடன், சந்து சலீம்குமார், அருண் குரியன், சரத் சபா, நிஷாந்த் சாகர், விஜயராகவன் ஆகியோரும் நடித்துள்ளனர். துல்கர் சல்மான், டோவினோ தாமஸ் ஆகியோரின் சிறப்பு தோற்றமும், மூத்தோன் என்ற கதாபாத்திரத்தில் மம்மூட்டியின் குரல் இருப்பும் படத்தின் சிறப்பம்சங்கள். இப்படத்தை கேரளாவில் பிரம்மாண்டமாக வெளியிட்டதும் துல்கரின் வேஃபெரர் ஃபிலிம்ஸ் தான். இப்படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்திருந்தார், ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்து இருந்தார். எடிட்டராக சமன் சாக்கோ பணியாற்றி இருந்தார்.