ஹாலிவுட் ரேஞ்சில் KGF 3... ஷூட்டிங் முதல் ரிலீஸ் வரை பக்கா பிளான் ரெடி - தயாரிப்பாளர் வெளியிட்ட மாஸ் அப்டேட்
KGF 3 : கே.ஜி.எஃப் 3 படத்தின் ஷூட்டிங் மற்றும் ரிலீஸ் அப்டேட்டை அப்படத்தின் தயாரிப்பாளர் விஜய் கிரிகந்தூர் சமீபத்திய பேட்டியில் வெளியிட்டுள்ளார்.
யாஷ் - பிரசாந்த் நீல் கூட்டணியில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் கே.ஜி.எஃப். முதல்பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை பிரம்மாண்டமாக தயாரித்த படக்குழு, அப்படத்தை கடந்த மாதம் வெளியிட்டது. யாஷ் உடன் பிரகாஷ் ராஜ், ரவீனா டண்டன், சஞ்சய் தத், ஸ்ரீநிதி ஷெட்டி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது.
உலகமெங்கும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைகளில் வெளியான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரிக்குவித்தது. அதன்படி இப்படம் வெளியான ஒரே மாதத்தில் ரூ.1200 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இப்படத்தின் இறுதியில் அதன் 3-ம் பாகம் உருவாகும் என்பதைக் கூறி இருந்தனர்.
இதனால் 3-ம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு தற்போதே அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. அப்படத்திற்கான கதை குறித்த விவாதங்களும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்நிலையில், கே.ஜி.எஃப் 3 படத்தின் ஷூட்டிங் மற்றும் ரிலீஸ் அப்டேட்டை அப்படத்தின் தயாரிப்பாளர் வெளியிட்டுள்ளார்.
அதன்படி கே.ஜி.எஃப். 3 படத்தின் ஷூட்டிங் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்பட உள்ளதாக கூறியுள்ள அவர், படத்தை 2024-ம் ஆண்டு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறி உள்ளார். மேலும் ஹாலிவுட்டில் உருவாக்கப்படும் அவெஞ்சர்ஸ் பட வரிசைகளைப் போல் கே.ஜி.எஃப்பையும் தொடர்ந்து அடுத்தடுத்த பாகங்களாக உருவாக்க உள்ளதாக அவர் கூறி உள்ளார்.
இதையும் படியுங்கள்... அஜித், விஜய் படங்களுக்கு நிகரான ஓப்பனிங்! பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பும் டான் -முதல்நாள் வசூல் இத்தனை கோடியா?