நைட் பார்ட்டிக்கு 35 லட்சம்; டாஸ்மாக் ஊழல் வழக்கில் நடிகை கயாடு லோகருக்கு தொடர்பா?
டாஸ்மாக் ஊழல் விவகாரம் தமிழ்நாட்டில் ஹாட் டாப்பிக் ஆக பேசப்படும் நிலையில், அதில் நடிகை கயாடு லோகரின் பெயரும் தற்போது அடிபட்டு வருகிறது.

Tasmac Scam in Tamilnadu
டாஸ்மாக்கில் ஊழல் நடந்திருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தது. இதைத் தொடர்ந்து அமலாக்கத்துறை தாமாக முன்வந்து டாஸ்மாக் ஊழலில் தொடர்புடையவர்களுக்கு சொந்தமான இடங்களில் திடீர் சோதனை நடத்தியது. டாஸ்மாக்கில் 1000 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்துள்ளதாக அதிரடியாக அறிவித்த கையோடு, விசாரணையையும் முடுக்கிவிட்டனர். இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
புயலை கிளப்பிய டாஸ்மாக் ஊழல்
டாஸ்மாக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான விசாகன் வீட்டில் கடந்த மே 16ந் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதன்பின்னர் அவரை அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணையும் நடத்தினர். இந்த சோதனையின் போது, சிக்கிய ஆவணங்கள் அடிப்படையில் ரத்தீஷ் என்பவரிடம் விசாரணை மேற்கொள்ள அமலாக்கத்துறை முயன்றது. ஆனால் அவர் தலைமறைவாகிவிட்டார். இந்த ரத்தீஷ், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் என கூறப்படுகிறது.
கயாடு லோகருக்கு தொடர்பா?
இந்நிலையில், டாஸ்மாக் ஊழல் வழக்கில் தற்போது நடிகை கயாடு லோகர் பெயரும் அடிபட தொடங்கி உள்ளது. டாஸ்மாக் வழக்கில் தொடர்புடையவர்கள் நடத்திய நைட் பார்ட்டியில் கயாடு லோகர் கலந்துகொண்டதாகவும், அதற்காக அவருக்கு ரூ.35 லட்சம் சம்பளம் வழங்கப்பட்டதாகவும் தகவல் பரவி வருகின்றன. இந்த தகவல் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. அதே வேளையில் கயாடு லோகர் தரப்பிலும் இதுகுறித்து எந்த வித விளக்கமும் தரப்படவில்லை. ஆனால் சோசியல் மீடியாவில் தற்போது கயாடு லோகரின் 35 லட்சம் சம்பளம் தான் ஹைலைட்டாக பேசப்பட்டு வருகிறது.
கயாடு லோகர் கைவசம் உள்ள படங்கள்
டிராகன் படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகை கயாடு லோகர் கோலிவுட்டில் பிசியான ஹீரோயினாக மாறிவிட்டார். தற்போது அவர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் உருவாகி வரும் இதயம் முரளி படத்தில் நாயகியாக நடிக்கிறார். இதுதவிர ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கும் எஸ்.டி.ஆர் 49 திரைப்படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க கமிட்டாகி உள்ளார். மேலும் இம்மார்டல் என்கிற திரைப்படத்தில் நடிகர் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் கயாடு லோகர்.