ஒத்த ரூபாய் தாரேன் பாட்டுக்கு என்னுடைய அனுமதி கேட்கல; இயக்குநரை விமர்சித்த கஸ்தூரி ராஜா!
Oththa Roova Song Controversy : குட் பேட் அக்லீ படத்தில் இடம் பெற்ற ஒத்த ரூபாய் தாரேன் பாடலுக்கு என்னுடைய அனுமதி பெறவில்லை என்று அந்த பாடலை எழுதிய கஸ்தூரி ராஜா விமர்சித்துள்ளார்.

குட் பேட் அக்லீ
Oththa Roova Song Controversy : இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார், த்ரிஷா, பிரபு, சிம்ரன், பிரசன்னா, சுனில், கிங்க்ஸ்லி, பிரியா பிரகாஷ் வாரியர் ஆகியோர் பலர் நடிப்பில் கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி திரைக்கு வந்த படம் தான் குட் பேட் அக்லீ. முழுக்க முழக்க அஜித்திற்காகவே எடுக்கப்பட்ட இந்தப் படம் அஜித் ரசிகர்களை வேறு ஒரு உலகத்திற்கு கொண்டு சென்றது. அஜித்தின் சினிமா வாழ்க்கையில் இந்தப் படம் திருப்பு முனையை ஏற்படுத்தியது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படம் நல்ல வரவேற்பு பெற்றது.
கஸ்தூரி ராஜா
இந்தப் படத்தில் ஒத்த ரூபா தாரேன், இளமை இதோ இதோ, என் ஜோடி மஞ்ச குருவி என்று பல படங்களின் ரெபரன்ஸ் இருந்தது. இந்தப் பாடல்கள் இளையராஜாவின் இசையில் வந்த பாடல்கள். இந்தப் பாடல்களை பயன்படுத்தியதற்கு அவரிடம் உரிய அனுமதி பெறாத நிலையில் காப்புரிமை கேட்டு தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இது பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் இப்போது கஸ்தூரி ராஜா ஒத்த ரூபா தாரேன் பாடல் தான் எழுதியது. அதனை தனது அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதாக கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
ஒத்த ரூபா தாரேன் பாடல் எழுதிய கஸ்தூரி ராஜா
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது: குட் பேட் அக்லீ படத்தில் நான் எழுதிய ஒத்த ரூபா தாரேன் பாடலை பயன்படுத்தியிருந்தார்கள். அந்த பாடலுக்காக நான் வழக்கு தொடர்ந்தால் அது அவர்களுக்கு அவமானமாக இருந்திருக்கும். அதுமட்டுமின்றி அது பெரும் சர்ச்சையாகவும், பரபரப்பாகவும் பேசப்பட்டிருக்கும். அதனால், தான் நான் அப்படி எதுவும் செய்யவில்லை.
மார்க் ஆண்டனி - குட் பேட் அக்லீ
இதே போன்றுதான் மார்க் ஆண்டனி படத்தில் பஞ்சு மிட்டாய் சேலை கட்டி என்ற பாடலும் இடம் பெற்றிருந்தது. அந்த படத்தை பார்த்த பிறகும் கூட நான் எதுவும் கண்டுகொள்ளவில்லை. அப்போது தான் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனின் திருமணம் நடந்தது. அவருடைய திருமணத்தில் நான் கலந்து கொண்டிருந்தேன். அப்போது உங்களது பாட்டு சூப்பர் சார் என்றார். ஆனால், இப்போது தான் ஏன் அப்படி செய்கிறார்கள் என்று எனக்கு புரிகிறது.
ஒத்த ரூபா தாரேன் பாடல் சர்ச்சை
அந்த பாடலை பயன்படுத்தும் போது கூட என்னிடம் அனுமதி பெற்றிருக்கலாம். இளம் இயக்குநர்களுக்கு அந்த மரியாதை தெரியவில்லை. இவரெல்லாம் ஒரு இயக்குநரா என்று எண்ணுகிறார்கள். நான் அஜித்தின் குட் பேட் அக்லீ படத்தை பார்க்கவில்லை. ஆனால், படம் நல்ல வசூல் கொடுத்திருப்பதாக சொல்கிறார்கள். ஒத்த ரூபா தாரேன் பாடலுக்காக இயக்குநரிடம் பேச முயற்சி செய்தேன். ஆனால், அவர் பேசவே விரும்பவில்லை.
ஆதிக் ரவிச்சந்திரன் புதிய படம்
அந்த பாடல் இடம் பெற்ற படம் ஒரு வருடத்திற்கு மேல் ஓடியது. ஆனால், இன்றைய காலகட்டத்தில் வரும் படங்கள் அந்தளவிற்கு ஓடுவதில்லை. படம் எடுக்க கோடியாய் கோடியாக செலவு செய்யும் இவர்களால் எப்படி ஒரு பாடலை சரியாக எடுக்க முடியும். அதுமட்டுமின்றி எப்படி ஒரு கதையை கொடுக்க முடியும். மார்க் ஆண்டனி, குட் பேட் அக்லீ படங்களுக்கு பிறகு ஆதீக் ரவிச்சந்திரன் புதிய படம் இயக்கவும் ரெடியாகிவிட்டார். இந்தப் படத்திலும் பழைய பாடல் பயன்படுத்துவாரா அல்லது புதிய பாடல் பயன்படுத்துவாரா என்பதை பொருத்திருந்து பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.