கோலிவுட்டில் அறிமுகமாகும் காந்தாரா சாப்டர் 1 பட வில்லன் குல்ஷன் தேவய்யா..!
காந்தாரா சாப்டர் 1 திரைப்படத்தின் அமோக வெற்றிக்கு பின்னர் அதில் வில்லனாக நடித்த குல்ஷன் தேவய்யாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. அவர் தமிழிலும் அறிமுகமாகிறார்.

Gulshan Devaiah Debut in Tamil
இந்தியாவிலேயே இந்த ஆண்டு அதிக வசூல் செய்த படம் என்கிற சாதனையை காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் படைத்திருக்கிறது. அப்படத்தின் வெற்றிக்கு பின்னர் அதில் நடித்த நடிகர், நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. ருக்மிணி வசந்த் பான் இந்தியா அளவில் பிசியாக இருக்கிறார். அதேபோல் அப்படத்தில் வில்லனாக அசத்திய குல்ஷன் தேவய்யாவுக்கும் தமிழ், தெலுங்கு என பல்வேறு மொழிகளில் பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. அண்மையில் தெலுங்கில் சமந்தா உடன் ஒரு படத்தில் நடிக்க கமிட்டான குல்ஷன், தற்போது தமிழிலும் ஒரு வெப் தொடர் மூலம் எண்ட்ரி கொடுத்திருக்கிறார்.
வெப் தொடரில் நடிக்கும் குல்ஷன் தேவய்யா
ஆர். மாதவன் நடிக்கும் 'லெகசி' என்ற தமிழ் க்ரைம் டிராமா தொடரில், நடிகர் குல்ஷன் தேவய்யா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஸ்டோன் பெஞ்ச் பிரைவேட் லிமிடெட் சார்பில் கல்யாண் சங்கர் தயாரிப்பில், சாருகேஷ் சேகர் இயக்கும் இந்தத் தொடர், அதிகாரம், ஒழுக்கம் மற்றும் பழிவாங்கல் ஆகியவற்றின் விறுவிறுப்பான கதையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லெகசி வெப் தொடர்
இந்தத் தொடர் குறித்து உற்சாகமாகப் பேசிய குல்ஷன் தேவய்யா, "என் திரைப்பயணத்தில் மொழி ரீதியாக பன்முகத்தன்மையைக் கண்டறிய 'லெகசி' ஒரு அற்புதமான வாய்ப்பு. சுமார் 14 ஆண்டுகளாக இந்தியில் மட்டுமே பணியாற்றிய பிறகு, இப்போது என் சிறகுகளை விரித்து பறக்கத் தயாராக உணர்கிறேன்.
தமிழில் நடிக்கும் குல்ஷன் தேவய்யா
மாதவன், நிமிஷா, அபிஷேக், கௌதம் கார்த்திக், திரு. வையாபுரி மற்றும் தமிழ் திரையுலகின் பிற அனுபவமிக்க நடிகர்களுடன் திரையைப் பகிர்ந்துகொள்வது எனக்குக் கிடைத்த பாக்கியம். கடமை, குடும்பம் மற்றும் சுயப் பொறுப்புணர்வுடன் போராடும் ஒரு காவலராக நான் நடிக்கிறேன். 'லெகசி' எனக்கு மிகவும் திருப்திகரமான அனுபவமாக உள்ளது, எனது இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக சென்னைக்குத் திரும்ப ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று கூறினார்.