காந்தாரா 2 படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்படுகிறதா? உண்மையை போட்டுடைத்த படக்குழு
ரிஷப் ஷெட்டி இயக்கி ஹீரோவாக நடித்து வரும் காந்தாரா 2 திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்படுவதாக தகவல் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.

Kantara 2 Release update
ரிஷப் ஷெட்டி இயக்கிய ‘காந்தாரா’ திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டானது. மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான மோதலைக் காட்டும் ஒரு உணர்வுப்பூர்வமான கதையாக இப்படம் அமைந்தது. ரிஷப் ஷெட்டி கம்பாளா வீரர் சிவாவாகவும், கிஷோர் வன அதிகாரி முரளியாகவும் நடித்திருந்தனர். சப்தமி கவுடா நாயகியாக நடித்திருந்தார். அச்யுத் குமார், பிரமோத் ஷெட்டி முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். அரவிந்த் எஸ். காஷ்யப்பின் ஒளிப்பதிவு செய்த இப்படத்திற்கு பி. அஜனீஷ் லோக்நாத் இசை அமைத்து இருந்தார்.
பிரம்மாண்ட வெற்றியடைந்த காந்தாரா
வெறும் ரூ.16 கோடி செலவில் தயாரான இப்படம் கன்னடத்துடன், இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளத்தில் டப் செய்யப்பட்டு வெளியானது. கர்நாடக கலாச்சாரத்தை உலகிற்கு அறிமுகப்படுத்திய ஒரு தலைசிறந்த படைப்பாக காந்தாரா விளங்குகிறது. இப்படம் பான் இந்தியா அளவில் ஹிட் அடித்து உலகளவில் ரூ.450 கோடி வரை வசூலித்து பிரம்மாண்ட வெற்றியை ருசித்தது. காந்தாரா படத்தின் அதிரிபுதிரியான வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.
காந்தாரா 2 ரிலீஸ் தேதி மாற்றமா?
"காந்தாரா சாப்டர் 1" என்கிற தலைப்பில் தயாராகி வரும் இப்படம் அக்டோபர் 2ந் தேதி ரிலீஸ் செய்யப்படும் என கடந்த ஆண்டே அறிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த சில தினங்களாக காந்தாரா 2 படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட இருப்பதாக செய்திகள் உலா வந்தன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி காந்தாரா 2 பட ரிலீஸ் தேதியில் எந்த மாற்றமும் இல்லை என்பதை அதிகாரப்பூர்வமாக தெளிவுபடுத்தியுள்ளது.
விறுவிறுப்பாக நடக்கும் காந்தாரா 2 ஷூட்டிங்
காந்தாரா 2 படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடைபெற்று வருகிறது. முந்தைய "காந்தாரா" படத்தின் வெற்றிக்குப் பிறகு, "காந்தாரா அத்தியாயம் 1" மேலும் ஆழமான கதை, கலாச்சாரம் மற்றும் தெய்வீக உலகத்திற்கு ரசிகர்களை அழைத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்காக ரிஷப் ஷெட்டி களரிப்பயிற்சி, குதிரையேற்றம், வாள் சண்டைப் பயிற்சி ஆகியவற்றைப் பெற்றுள்ளார். இப்படம் கன்னடத்துடன், தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம், பெங்காலி மற்றும் ஆங்கிலத்திலும் வெளியாக உள்ளது.