Kannappa : பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆக மாறிய கண்ணப்பா; முதல் நாளிலேயே இத்தனை கோடி வசூலா?
விஷ்ணு மஞ்சு நாயகனாக நடித்துள்ள வரலாற்று கதையம்சம் கொண்ட படமான கண்ணப்பா முதல் நாளில் எவ்வளவு வசூலித்துள்ளது என்பதை பார்க்கலாம்.

Kannappa Box Office
விஷ்ணு மஞ்சு நடிப்பில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகி உள்ள திரைப்படம் 'கண்ணப்பா'. இப்படத்தில், நாத்திகராக இருந்து பின்னர் சிவபெருமானின் தீவிர பக்தராக மாறும் கண்ணப்பரின் கதாபாத்திரத்தில் விஷ்ணு மஞ்சு நடித்துள்ளார். இயக்குனர் முகேஷ் குமார் சிங் இயக்கியுள்ள இப்படத்தில், பல்வேறு திரையுலகைச் சேர்ந்த முன்னணி நட்சத்திரங்கள் கௌரவ வேடங்களில் நடித்துள்ளனர். மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், கிராதா வேடத்திலும், தெலுங்கு சூப்பர் ஸ்டார் பிரபாஸ், ருத்ரா வேடத்திலும், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அக்ஷய் குமார் சிவபெருமான் வேடத்திலும் நடித்துள்ளனர்.
விமர்சகர்களுக்கு மிரட்டல்
கண்ணப்பா திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆகி உள்ளது. இப்படத்தின் ரிலீசுக்கு முன்னர் தங்கள் படத்தை ட்ரோல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கண்ணப்பா படக்குழு எச்சரித்திருந்தது. அதுமட்டுமின்றி இப்படத்தை விமர்சகர்கள் விமர்சிக்க கூடாது என்று அவர்களுக்கு மிரட்டல் விடுத்ததாகவும் யூடியூப் விமர்சகர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். கண்ணப்பா படக்குழுவின் இந்த செயலுக்கு சோசியல் மீடியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
கண்ணப்பா படத்தின் முதல் நாள் வசூல்
கண்ணப்பா படத்திற்கு கலவையான விமர்சனங்கள் தான் கிடைத்து வருகின்றன. இப்படத்தின் முதல் பாதி சுமாராக இருப்பதாக்வும், இரண்டாம் பாதி சூப்பராக இருப்பதாகவும் கூறி வருகிறார்கள். இருப்பினும் நேற்று ரிலீஸ் ஆன படங்களில் கண்ணப்பா திரைப்படம் தான் அதிகம் வசூல் செய்துள்ளது. இப்படம் நேற்று ஒரே நாளில் இந்தியாவில் மட்டும் ரூ.9 கோடி வசூலித்து உள்ளதாம். உலகளவில் இப்படத்தின் வசூல் 12 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. நடிகர் விஷ்ணு மஞ்சுவின் கெரியரில் முதல் நாளில் அதிக வசூல் அள்ளிய படம் என்கிற சாதனையை கண்ணப்பா படைத்துள்ளது.
கண்ணப்பா படத்தின் பட்ஜெட்
கண்ணப்பா திரைப்படத்தை சுமார் 200 கோடி பட்ஜெட்டில் தயாரித்துள்ளார்கள். இப்படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ள மோகன்லால், பிரபாஸ் ஆகியோர் எவ்வித சம்பளமும் வாங்காமல் நடித்துக் கொடுத்துள்ளார்களாம். பக்திப் படமாக வெளியாகி இருக்கும் கண்ணப்பா, சிவ பக்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் ரிலீஸ் ஆகி உள்ளதால், தெலுங்கு மாநிலங்களில் சக்கைப்போடு போட்டு வந்த குபேரா படத்துக்கு பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. அப்படத்திற்கான திரையரங்குகளின் எண்ணிக்கையும் கணிசமாக குறைக்கப்பட்டு உள்ளதாம்.