Kamal Haasan: அன்று முதல் இன்று வரை... உலக நாயகன் கமல்ஹாசனின் மறக்க 15 முடியாத வேடங்கள்!! புகைப்பட தொகுப்பு!
நடிகர் கமல்ஹாசன் இன்று தன்னுடைய 67 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், இவருக்கு திரைபிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொண்டர்கள் என பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
சிறிய வயதில் இருந்து தற்போது வரை கமல் நடித்து, பலராலும் மறக்க முடியாத திரைப்படங்கள் மற்றும் தனித்துவமான கதாபாத்திரம் குறித்த புகைப்பட தொகுப்பு இதோ...
கமல்ஹாசன் முதல் படமான, 'களத்தூர் கண்ணம்மா' படத்தை அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது. 1960 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை 'பீம் சிங்' என்பவர் இயக்கி இருந்தார். இந்த படத்தில், ரியல் நட்சத்திர ஜோடியான, காதல் மன்னன் ஜெமினிகணேசன் மற்றும் சாவித்திரி ஆகியோர் நடித்திருந்தது கூடுதல் சிறப்பு.
குழந்தை நட்சத்திரத்தில் இருந்து ஹீரோவாக மாறிய பின்னர், அடுத்தடுத்து இவர் நடித்த அபூர்வ ராகங்கள், மூன்று முடுச்சி போன்ற படங்கள் இவருக்கு சூப்பர் ஹிட்டாக அமைந்தாலும், 1977 ஆம் ஆண்டு, சப்பானி என்கிற கதாபாத்திரத்தில் நடித்த 16 வயதினிலே கதாபாத்திரம் தான் மக்கள் மனதில் நின்றது.
தொடர்ந்து, ஆக்ஷன் மற்றும் காதல் பொங்கும் கதைகளில் நடித்து வந்த இவரை... பெரிய பல்லுடன் தோன்றும் கல்யாண ராமனாக்கி ரசிகர்களை கவனிக்க வைத்தார், இயக்குனர் ஜி.என்.ரங்கராஜன். கமல் இரட்டை வேடங்களில் நடித்த இந்த படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.
வித்தியாசமான சாகச கதைகளிலும் நடிக்க விரும்பிய கமல்ஹாசனின் ஆசையை நிறைவேற்றிய படம் என்றால் அது 'அலாவுதீன் அற்புத விளக்கு' திரைப்படம் தான். இந்த படம் இயக்குனர் ஐ.வி.சசி இயக்கத்தில் 1979 ஆம் ஆண்டு வெளியானது.
இயக்குனர் பாலு மகேந்திரா இயக்கத்தில் 1982 ஆம் ஆண்டு வெளியான 'மூன்றாம் பிறை' படத்தின் மூலம் கமலின் மாறுபட்ட நடிப்பை பார்க்க முடிந்தது. மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை எப்படி அவர் பொத்தி பொத்தி பாதுகாப்பார் என்பதை கண்ணீர் வரும் கிளைமேக்சில் முடித்திருப்பார் இயக்குனர். கமலின் நடிப்பும் இந்த படத்தில் வெகுவாக பாராட்டப்பட்டது.
தொடர்ந்து சில சாதாரண கதைகளை தேர்வு செய்து நடித்து வந்தாலும், கமல் ஹாசனின் தேடுதல் வித்தியாசமாகவே இருந்தது. அந்த வகையில், இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'நாயகன்' திரைப்படம் கமல்ஹாசனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. 1997 இல், டைம் இதழ் கமல் நடித்த 'நாயகன்' படத்தை, எல்லா காலத்திலும் ரசிக்க கூடிய சிறந்த 100 திரைப்படங்களில் ஒன்றாக பட்டியலிட்டது குறிப்பிடத்தக்கது.
அபூர்வ சகோதரர்கள் படத்தில் குட்டி அப்புவாக வந்து, ஒட்டு மொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார் கமல். தற்போது வரை கமல் எப்படியெல்லாம் குள்ளமாக நடித்தார் என்கிற ரகசியத்தை ரகசியமாகவே வைத்துள்ளனர். மேலும் இப்படத்தில் மாறுபட்ட மூன்று வேடத்தில் கமல் நடித்திருப்பார்.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்த 'இந்தியன்' திரைப்படம் கமல்ஹாசனுக்கு தேசிய விருதை பெற்று தந்ததோடு, 100 நாட்களுக்கும் மேல் திரையரங்கில் ஓடி சாதனை படைத்தது.
இந்தியன் படத்தில் நடித்து முடித்த கையேடு 'அவ்வை ஷண்முகி' படத்தில் பெண் வேடம் போட்டு நடித்து அதே ஆண்டில் அடுத்த ஹிட்டையும் கொடுத்தார் நடிகர் கமல்ஹாசன்.
அதே போல் கமல்ஹாசன் இயக்கி, தயாரித்து, மிகவும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்த ஹை ராம் திரைப்படமும் தற்போது வரை பல ரசிகர்களால் விரும்ப கூடிய படம் என்பது குறிப்பிடத்தக்கது.
2001 ஆம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியான ஆளவந்தான் திரைப்படம் உலக நாயகன் ரசிகர்களை வியக்க வைக்கும் விதத்தில் இருந்தது. இந்த படத்திற்காக தன்னுடைய உடல் எடையை ஏற்றி, குறைத்து என இரட்டை வேடத்தில் நடித்திருந்தார் கமல்.
உழைக்கும் மக்களுக்காக போராடும் மனிதராக, அன்பே சிவம் படத்தில் நடித்திருந்தார் கமல். இதில் அவர் ஏற்று நடித்திருந்த வேடம், உழைப்பவர்களுக்காக இவர் பட்ட பாடு திரைப்படத்தை பார்ப்பவர்கள் நெஞ்சங்களை கரைய வைத்தது.
2004 ஆம் ஆண்டு கமல்ஹாசன் இயக்கி நடித்திருந்த திரைப்படம் விருமாண்டி. இத்திரைப்படம் தென்கொரியாவில் நடைபெற்ற உலக திரைப்பட விழாவில் 2004 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஆசிய திரைப்படம் என்ற விருதைப் பெற்றது. மரணதண்டனைக் கைதிகள் குறித்து ஆவணப் படமெடுக்க வருகின்ற ஏஞ்சலியா காட்டமுத்து, இவர்களிடம் நடந்ததை குறித்து கேட்டு பதிவு செய்கிறார். அதன் படி, கொத்தாள தேவர் முதலில் தனக்கு என்ன நேர்ந்தது என்பதை விவரித்தும், அதன் பின் நாயகன் விருமாண்டி விவரிப்பதும் கதையாக அமைந்தது. இதில் மரணதண்டனை தேவையில்லை என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது.
இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான தசாவதாரம் படத்தில் 10 வேடங்களில் நடித்து பிரமிக்க வைத்தார். ஏற்கனவே நவராத்திரி படத்தில் சிவாஜி கனெக்ஷன் 9 வேடத்தில் நடித்ததை தொடர்த்து 10 வேடங்களில் நடித்து, அதிக வேடங்களில் நடித்த நடிகர் என்கிற பெருமையையும் பெற்றார் கமல்.
வித்தியாசமான கதைகளை தேடி பிடித்து நடித்து வரும் கமல் உத்தம வில்லன் படத்திலும் தன்னுடைய மாறுபட்ட கதாபாத்திரத்தை வெளிப்படுத்தி நடித்திருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் தோல்வியை தழுவியதும் குறிப்பிடத்தக்கது.