- Home
- Cinema
- தரமான சம்பவமெல்லாம் இல்ல... ரஜினியோடு அடுத்த படம்; அடுக்கடுக்கான அப்டேட் அள்ளிவீசிய கமல்..!
தரமான சம்பவமெல்லாம் இல்ல... ரஜினியோடு அடுத்த படம்; அடுக்கடுக்கான அப்டேட் அள்ளிவீசிய கமல்..!
சைமா விருது விழாவில் கலந்துகொண்ட கமல்ஹாசன், அடுத்த படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைய உள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார்.

Rajini Kamal Movie Update
தமிழ் சினிமாவின் இரு பெரும் ஜாம்பவான்களாக ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் உள்ளனர். அவர்கள் இருவரும் ஆரம்ப காலகட்டத்தில் ஏராளமான படங்களில் இணைந்து நடித்து வந்தனர். ஆனால் தமிழில் கடந்த 1979-ம் ஆண்டு வெளிவந்த நினைத்தாலே இனிக்கும் படத்திற்கு பின்னர் ரஜினியும், கமலும் ஒரு படத்தில் கூட இணைந்து நடிக்கவில்லை. சுமார் 46 ஆண்டுகளாக இந்த கூட்டணி இணைந்து நடிக்காமல் இருந்து வந்த நிலையில், அவர்கள் இருவரும் மீண்டும் இணைய உள்ளதாக கடந்த மாதம் ஒரு தகவல் கோலிவுட்டில் காட்டுத்தீ போல் பரவியது. அதுபற்றி கமல்ஹாசனே முதன்முறையாக பேசி இருக்கிறார்.
ரஜினியுடன் கூட்டணியை உறுதி செய்த கமல்ஹாசன்
துபாயில் நடைபெற்ற சைமா விருது நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் கமல்ஹாசன். அதில் சிறந்த படத்திற்கான விருதை அமரன் வென்றது. அப்படத்தின் தயாரிப்பாளராக அவ்விருதை பெற்றுக்கொண்டார் கமல். அப்போது அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் சதீஷ், ஒரு சிறப்பான தரமான சம்பவம் நடக்கப்போறதா நாங்க ஒரு நியூஸ் கேள்விப்பட்டோம். அது உண்மையானு தெரியல. உண்மையா இருந்தா நல்லா இருக்குமேனு நினைக்கிறோம். அது உண்மையா சார் என கேட்டார். இதற்கு கமல்ஹாசன் தன்னுடைய பாணியிலேயே பதிலை அளித்து அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
கமல் சொன்ன பதில்
கமல்ஹாசன் கூறியதாவது : “தரமான சம்பவமா இல்லையா என்பதை ஆடியன்ஸ் தான் சொல்ல வேண்டும். நடக்குறதுக்கு முன்னாடியே சம்பவம் தரமா இருக்குனு சொன்னா எப்புடி. அவர்கள் தர தரனு இழுத்துவிடுவார்கள் என கமல் சொன்னதும். குறுக்கிட்ட சதீஷ், இதோட அப்டேட் என்னவென்றால் உலக நாயகனும், சூப்பர்ஸ்டாரும் இணையப்போவது நடக்கப்போகுது என சொன்னதும் சிரித்த கமல், நாங்க இணைந்து ரொம்ப நாள் ஆச்சு. இத்தனை நாள் விரும்பி பிரிந்திருந்தோம். ஏனெனில் ஒரு பிஸ்கட்டை பிச்சு ரெண்டு பேருக்கும் கொடுத்துட்டு இருந்தாங்க. ஆளுக்கு ஒரு பிஸ்கட் வேணும்னு ஆசைப்பட்டோம். அதை வாங்கி நல்லா சாப்பிட்டோம். இப்போ மறுபடியும் பாதி பிஸ்கட் போதும்னு முடிசு பண்ணிட்டோம். அதனால நாங்க மீண்டும் இணைகிறோம் என அறிவித்தார் கமல்.
எங்களுக்குள் போட்டியே இல்லை
தொடர்ந்து பேசிய அவர், எங்களுக்குள் போட்டி நீங்கள் ஏற்படுத்தியது தான். எங்களுக்கு அது போட்டியே இல்ல, சான்ஸ் கிடைச்சதே பெரிய விஷயம்., நாங்க ரெண்டு பேரும் முன்னுதாரணமா இருக்கனும்னு அப்பவே முடிவு பண்ணிட்டோம். அப்படியே தான் அவரும் இருக்கிறார். நானும் இருக்கிறேன். ரெண்டு பேரும் சேருவது பிசினஸ் ரீதியாக ஆச்சர்யமாக இருக்கலாமே தவிர, எங்களுக்கு இது எப்போவே நடக்க வேண்டியது, இப்போவாச்சும் நடக்குதேனு சந்தோஷப்படுறோம் என கமல் கூறினார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமும், ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்க உள்ளது. லோகேஷ் கனகராஜ் தான் இப்படத்தை இயக்க உள்ளார். விரைவில் இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.