கைவசம் 4200 கோடி பட்ஜெட் படங்கள்... நடிகை காஜல் அகர்வாலின் வியக்க வைக்கும் லைன் அப் இதோ
திருமணத்துக்கு பின்னரும் சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார் காஜல் அகர்வால். அவர் கைவசம் உள்ள படங்களைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Kajal Aggarwal Upcoming Movies
தமிழ், தெலுங்கு, இந்தி என பான் இந்தியா அளவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் சாலை விபத்தில் இறந்துவிட்டதாக சமீபத்தில் வதந்திகள் பரவின. இதையடுத்து, அவர் தான் நலமாக இருப்பதாகவும், எந்த வதந்திகளையும் நம்ப வேண்டாம் என்றும் இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்தார். திருமணத்துக்கு பின்னரும் சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார் காஜல். இந்நிலையில், அவரது கைவசம் உள்ள படங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளன.
காஜல் அகர்வால் கைவசம் உள்ள படங்கள்
இந்தியில் உருவாகும் காஜல் அகர்வால் 'தி இந்தியா ஸ்டோரி' படத்தில் ஸ்ரேயஸ் தல்படேவுடன் இணைந்து நடிக்கிறார். சேடன் டிகே இயக்கும் இந்தப் படத்தை எம்ஐஜி புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. பூச்சிக்கொல்லி நிறுவனங்களின் மோசடிகளை மையமாகக் கொண்ட இந்தப் படம் 2026 இல் வெளியாகவுள்ளது.
இந்தியன் 3
இதுதவிர நடிகர் கமல்ஹாசனுடன் 'இந்தியன் 3' படத்திலும் நடிக்கிறார். பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கும் இந்தப் படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனமும், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகின்றன. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. எஞ்சியுள்ள சில காட்சிகள் படமாக்க தாமதம் ஆகி வருகிறது. அநேகமாக இப்படம் 2026-ல் வெளிவர வாய்ப்பு உள்ளது.
ராமாயணம்
நிதேஷ் திவாரி இயக்கும் 'ராமாயணம்' படத்திலும் காஜல் அகர்வால் நடிக்கிறார். ரூ.4000 கோடி பட்ஜெட்டில் இரண்டு பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தின் முதல் பாகம் 2026 தீபாவளிக்கும், இரண்டாம் பாகம் 2027 தீபாவளிக்கும் வெளியாகும். காஜல் இப்படத்தில் மண்டோதரியாக நடிக்கிறார். முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ், சன்னி தியோல், ரகுல் ப்ரீத் சிங், ஷிபா சத்தா, இந்திரா கிருஷ்ணன், அருண் கோவில், ரவி துபே, அமிதாப் பச்சன், குணால் கபூர், லாரா தத்தா உள்ளிட்டோர் இப்படத்தில் நடிக்கின்றனர்.
பிளாப் ஆன காஜல் படங்கள்
காஜல் அகர்வால் நடிப்பில் 2025 ஆம் ஆண்டில் இரண்டு படங்கள் வெளியானது. அந்த இரண்டுமே தோல்வியை சந்தித்தது. அதில் ஒன்று சல்மான் கானுடன் அவர் நடித்த சிக்கந்தர். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரூ.200 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் ரூ.177 கோடி மட்டுமே வசூலித்தது. மேலும், அவர் முகேஷ் குமார் சிங் இயக்கிய 'கன்னப்பா' படத்திலும் நடித்தார். இந்தப் படமும் தோல்வியடைந்தது. ரூ.200 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் ரூ.46 கோடி மட்டுமே வசூலித்தது.