- Home
- Cinema
- K Rajan: அடையாறு பாலத்தில் நடந்தது என்ன? கே.ராஜன் கார் டிரைவர் சொன்ன பகீர் தகவல்.! திடீர் முடிவுக்கு இதுதான் காரணமா?
K Rajan: அடையாறு பாலத்தில் நடந்தது என்ன? கே.ராஜன் கார் டிரைவர் சொன்ன பகீர் தகவல்.! திடீர் முடிவுக்கு இதுதான் காரணமா?
K Rajan Producer Death Reason : பிரபல திரைப்படத் தயாரிப்பாளரும் நடிகருமான கே.ராஜன் தற்கொலை குறித்து அவரது கார் டிரைவர் கூறிய தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

K Rajan Producer Death Reason
தமிழ் திரைப்பட தயாரிப்பாளரான கே. ராஜன் நேற்று மாலை அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 85. தமிழ் திரையுலகம் குறித்து அடிக்கடி youtube தொலைக்காட்சிகளில் பேட்டிளித்து பிரபலமானவர் கே ராஜன். 1980-கள் தொடங்கி பல படங்களை தயாரித்திருக்கிறார். 1983 ஆம் ஆண்டு வெளியான ‘பிரம்மச்சாரிகள்’ திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக வாழ்க்கையைத் தொடங்கினார்.

உயிரை மாய்த்துக் கொண்ட கே.ராஜன்
சினிமா ஆடியோ வெளியீட்டு விழாக்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் தமிழ் சினிமா பிரபலங்கள் சந்திக்கும் சவால்கள், தயாரிப்பாளர்களின் நஷ்டங்கள், கஷ்டங்கள், நடிகர்களின் அதிகப்படியான சம்பளங்கள், திரைத்துறையில் நடக்கும் முறைகேடுகள் குறித்து வெளிப்படையாக பேசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் கே ராஜன். இவர் தைரியமானவராக அறியப்பட்ட நிலையில், நேற்று கூவம் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கே.ராஜனின் ஓட்டுநர் பரபரப்பு பேட்டி
அவரது மறைவு குறித்து பலரும் பல வதந்திகளை பரப்பி வருகின்றனர். இந்த நிலையில் அவரை காரில் அழைத்துச் சென்ற கார் டிரைவர் தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, “காரில் எப்போதும் ஒரு ரவுண்டு போயிட்டு வரலாம் என்று கூப்பிடுவார். அதுபோலத்தான் நேற்றும் என்னை கூப்பிட்டார். நான் சிறிது நேரம் நடை பயிற்சி செய்ய வேண்டும். எனவே பாலத்திற்கு அருகே இறக்கிவிட்டு நீ வண்டியை முன்னே எடுத்துச் செல் என்று கூறினார். நானும் அது போல வண்டியை சிறிது தூரம் முன்னே எடுத்துச் சென்றேன். அவர் நடந்து செல்லும் வரை நான் பக்கவாட்டில் கண்ணாடி வழியாக அவரை கவனித்துக் கொண்டே சென்றேன். ஆனால் அவர் திடீரென ஆற்றுக்குள் குதித்து விட்டார். நான் இறங்கி ஓடுவதற்குள் அவர் குதித்து விட்டார்.
குடும்ப பிரச்சனை காரணமல்ல
மேலும் அவர் ஐந்து வருடமாக தனிமையில் இருப்பதாகவும், அதனால் மன உளைச்சல் ஏற்பட்டதாகவும் கூறுகிறார்களே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அவர் தனியாக இல்லை. அவருடைய மூத்த மகன் அவருடன் தான் இருக்கிறார். எனவே இது தவறான தகவல் என்று அதை மறுத்தார். எப்போதும் அந்த இடத்தில் அவர் வாக்கிங் செல்வது வழக்கம். காரில் வரும்போதும் அவர் என்னிடம் எதுவும் பேசவில்லை. அவரது நடத்தையில் எந்த மாற்றமும் தெரியவில்லை. அவர் வழக்கம் போல நார்மலாக தான் இருந்தார். அவர் பண நெருக்கடியில் தவித்ததாக கூறுகிறார்கள். ஆனால் அது குறித்து தனக்கு எதுவும் தெரியாது. பண விஷயங்கள் குறித்தோ அல்லது தனிப்பட்ட சில விஷயங்கள் குறித்து அவர் என்னிடம் எதுவும் பேசியதில்லை என்று கார் ஓட்டுனர் கூறினார்.
தனிமையை விரும்புவார் - கே.ராஜன் உறவினர் பேட்டி
கே ராஜனின் உறவினர் அளித்த பேட்டியில், “கே. ராஜனின் மறைவு எங்கள் குடும்பத்திற்கு பேரிழப்பு. நேற்று முதல் செய்திகளில் குடும்பத்தினரால் தான் அவர் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார் என்று கூறுகிறார்கள். ஆனால் இது முழுக்க முழுக்க தவறான செய்தி. அவர் எப்போதும் தனிமையை விரும்புவார். அவருக்கு இரைச்சல் என்பது சுத்தமாக பிடிக்காது. அதனால்தான் அவர் தனிமையில் சில காலமாக வாழ்ந்து வருகிறார். அவருடைய கார் ஓட்டுநர் கடந்த ஏழு ஆண்டுகளாக அவருடன் உதவியாக இருந்து வருகிறார். அதேபோல் கே ராஜனின் மகன்களில் யாராவது ஒருவர் வந்து தினமும் இரவு அவருக்குத் துணையாக அவருடன் தங்கி செல்வார்கள். அதேபோல் அவரது மகள்கள் சமைக்கும் உணவை தான் அவர் சாப்பிடுவார். தினமும் மகள்கள் வீட்டில் இருந்து அவருக்கு உணவு செல்லும்.
இதயக் கோளாறால் அவதிப்பட்டு வந்தார்
அவருக்கு கடந்த இரண்டு வருடங்களாகவே இதயக் கோளாறுகள் இருந்து வருகிறது. அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சைகள் நடைபெற்றுள்ளது. நான்கு நாட்களுக்கு முன்பு கூட அவருக்கு பேஸ் மேக்கர் பொருத்தப்பட்டுள்ளது. அதற்கு 12 லட்சம் வரை செலவு செய்து அவர்களது குடும்பத்தினர் பார்த்துக் கொண்டனர். அவர் இதுவரை யாரிடமும் கடன் வாங்கியது கிடையாது. பலருக்கு அவர் உதவி செய்துள்ளார். ரூ.20 கோடி ரூபாய் அவர் கடனாக கொடுத்து திருப்பி வாங்க முடியாமல் இருந்து வந்தார். இருப்பினும் அவருக்கு கடன் பிரச்சனையாலோ குடும்பப் பிரச்சனையாலோ இந்த முடிவை அவர் எடுக்கவில்லை. செய்திகளில் குடும்பப் பிரச்சனை என்று வருவது மிகவும் தவறான தகவலாகும்.
பிறரை கஷ்டப்படுத்த வேண்டாம் என நினைத்திருப்பார்
வாக்கிங் செல்ல வேண்டும் என்று கூறி கார் ஓட்டுனர் உடன் சென்றுள்ளார். ஆனால் திடீரென அவர் இப்படி ஒரு முடிவு எடுப்பார் என்பது யாருக்கும் தெரியாது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் இருதய பிரச்சனையில் வலியை பொறுத்துக் கொண்டு வந்துள்ளார். அவருக்கு மேலும் மேலும் வலியை தாங்கிக் கொள்ள முடியவில்லை. நான்கு நாள் முன்பு பேஸ்மேக்கர் பொருத்தப்பட்ட போது கூட தன்னால் வலியை தாங்கிக் கொள்ள முடியவில்லை, தலை மிகவும் பாரமாக இருப்பதாக குடும்பத்தினருடன் கூறி உள்ளார். தூக்கம் வராமல் தவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு கூட அடுத்த மூன்று மாதங்களுக்கு தேவையான மாத்திரை மருந்துகளை வாங்கி வந்துள்ளார். ஆனால் அவர் திடீரென ஏன் இந்த முடிவுக்கு வந்தார் என்று தெரியவில்லை. மற்றவர்களுக்கு நம்மால் கஷ்டம் ஏற்படக் கூடாது என்று அவர் நினைத்திருக்கலாம். அதனால் கூட அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம்” என்று அவரது உறவினர் கூறினார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

