Tamil Movies : ஜூலை மாதம் திரைக்கு வரவுள்ள தமிழ்ப் படங்கள் பட்டியல் - ஒரு பார்வை.!
ஜூலை மாதம் வெளியாக உள்ள தமிழ் திரைப்படங்கள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

Tamil Movies Released in July 2025
தமிழ் திரை ரசிகர்களுக்கு இந்த ஆண்டின் முதல் பாதி சற்றே சோர்வை ஏற்படுத்தி உள்ளது. ஜனவரி மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை சுமார் 114 படங்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இதில் சில படங்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. குடும்பஸ்தன், டிராகன், டூரிஸ்ட் ஃபேமிலி போன்ற சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்கள் மட்டுமே வெற்றியைக் கொடுத்தன. மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பல திரைப்படங்கள் தோல்வியைத் தழுவின. இந்த நிலையில் ஜூலை மாதம் அரை டஜனுக்கும் அதிகமான திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாவதற்கு வரிசை கட்டி நிற்கின்றன. அது குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
பறந்து போ
‘தங்க மீன்கள்’ படத்தை இயக்கிய ராம் இயக்கி உள்ள திரைப்படம் தான் ‘பறந்து போ’. மிர்ச்சி சிவா, அஞ்சலி, அஜு வர்கீஸ், கிரேஸ் ஆண்டனி உள்ளிட்ட பலர் நடிப்பில் இந்த படம் உருவாகி உள்ளது. இந்தத் திரைப்படம் வருகிற ஜூலை நான்காம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. ‘தங்க மீன்கள்’, ‘கற்றது தமிழ்’, ‘தரமணி’ போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ராம் இயக்கி இருப்பதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
Ghaati
நடிகை அனுஷ்கா நடிப்பில் பான் இந்தியா படமாக உருவாகி வரும் திரைப்படம் தான் Ghaati. இந்தப் படத்தை வானம் கிருஷ் இயக்கியுள்ளார். அனுஷ்காவுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், விக்ரம் பிரபு, ஜெகபதி பாபு, ஜான் விஜய், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வித்யாசாகர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படம் ஏப்ரல் மாதமே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், வெளியீடு தள்ளிப் போயுள்ளது. ஜூலை 11ஆம் தேதி படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
3BHK
சரத்குமார், தேவயானி, சித்தார்த் ஆகியோர் நடிப்பில் ஸ்ரீ கணேஷ் இயக்கி உள்ள திரைப்படம்தான் 3BHK. சொந்த வீடு கட்ட வேண்டும் என்கிற கனவு குறித்து இந்த படம் பேசுகிறது. ‘சூரிய வம்சம்’ திரைப்படத்திற்குப் பின்னர் சரத்குமார், தேவயானி காம்பினேஷன் இந்த படத்தில் இணைந்துள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. ஜூலை 4 ஆம் தேதி படம் வெளியாகவுள்ளது.
ஃப்ரீடம்
நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் சசிக்குமார். ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ வெற்றிக்குப் பின்னர் அவர் நடித்திருக்கும் திரைப்படம்தான் ‘ஃப்ரீடம்’. இந்தப் படத்தை ‘கழுகு’ படத்தை இயக்கிய சத்ய சிவா இயக்கியிருக்கிறார். சசிகுமார் உடன் இணைந்து லிஜாமோல், போஸ் வெங்கட், மாளவிகா அவினாஷ் என பலர் நடித்துள்ளனர். 90’s காலகட்டத்தில் இலங்கை தமிழர்கள் எதிர்கொண்ட பிரச்சனையைப் பற்றி பேசும் படமாக இந்த படம் உருவாகி உள்ளது. படம் ஜூலை 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
தேசிங்கு ராஜா 2
2013 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் தான் தேசிங்கு ராஜா. இந்தப் படத்தை இயக்குனர் எழில் இயக்கி இருந்தார். சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் எழில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார். முதல் பாகத்தில் நடித்த விமலே இந்த பாகத்திலும் கதாநாயகனாக நடிக்க ரவி மரியா, ரோபோ சங்கர், சிங்கம் புலி, ரெடின் கிங்க்ஸ்லி, குக் வித் கோமாளி பிரபலம் புகழ் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜூலை 11 ஆம் தேதி இந்த படம் திரையில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாரீசன்
‘மாமன்னன்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பகத் பாசில், வடிவேலு கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் ‘மாரீசன்’. இந்தப் படத்தை சுதீஷ் சங்கர் இயக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். சூப்பர் குட் பிலிம்ஸ் இன் 98-வது படமாக இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தின் இயக்குனர் சின்னத்திரையிலும் மலையாளத்திலும் சில படங்களை இயக்கியுள்ளார். ‘மாரீசன்’ திரைப்படம் ஜூலை 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
தலைவன் தலைவி
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன், காளி வெங்கட், மைனா நந்தினி, தீபா, ரோஷினி, சென்ட்ராயன் என பலர் நடிப்பில் உருவாகி உள்ளது திரைப்படம் தான் ‘தலைவன் தலைவி’. ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘நம்ம வீட்டு பிள்ளை’ போன்ற குடும்ப பாங்கான படங்களை இயக்கிய பாண்டிராஜ் இயக்கியிருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்த்து அதிகமாகி உள்ளது. இந்தப் படம் வருகிற ஜூலை 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.