- Home
- Cinema
- ஜனநாயகன் படத்தை கசிய விட்டது விஜய்யா? போலீசில் பரபரப்பு புகார்.. பின்னணியில் அதிர்ச்சி தகவல்!
ஜனநாயகன் படத்தை கசிய விட்டது விஜய்யா? போலீசில் பரபரப்பு புகார்.. பின்னணியில் அதிர்ச்சி தகவல்!
Jananayagan Movie Leak: ஜனநாயகன் படத்தை விஜய்யே கசிய விட்டு கலவரம் ஏற்படுத்த முயல்வதாக இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் போலீசில் பரபரப்பு புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

முடங்கிய ஜனநாயகன்
தமிழக சட்டப்பேரவை தேர்தல் களைகட்டியுள்ள நிலையில், நடிகரும், தவெக தலைவருமான விஜய் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துவாரா? என பலரும் எதிர்பார்த்துள்ளனர். விஜய்யும் பல்வேறு இடங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையே ஹெச்.வினோத் இயக்கத்தில் அனிருத் இசையில் 'ஜனநாயகன்' என்ற தனது கடைசி படத்தில் விஜய் நடித்து முடித்து விட்டார். இந்த படம் கடந்த பொங்கல் பண்டிகையொட்டி வெளியாக இருந்தது. ஆனால் மத்திய தணிக்கை வாரியம் சென்சார் சர்டிபிகேட் வழங்காததால் ஜனநாயகன் பல மாதங்கள் முடங்கி கிடக்கிறது.
இணையத்தில் லீக் ஆன ஜனநாயகன்
ஜனநாயகன் முடங்கியதற்கு மத்திய அரசே காரணம் என திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டி இருந்தன. விஜய்யும் மறைமுகமாக பாஜகவுக்கு கண்டனம் தெரிவித்து இருந்தார். ஜனநாயகன் வழக்கு உச்சநீதிமன்றம் வரையும் சென்று இருந்தது. இந்த நிலையில், இன்னும் சென்சார் சர்டிபிகேட் கூட வழங்கப்படாத நிலையில், ஜனநாயகன் படம் முழுவதும் இணையத்தில் வெளியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலில் படத்தின் சண்டை காட்சிகள் மட்டும் வெளியாக இருந்த நிலையில், பின்பு மொத்த படத்தின் காட்சிகளும் லீக் ஆனதை பார்த்து விஜய்யும், படக்குழுவினரும் அதிர்ச்சி அடைந்தனர்.
சூர்யா, சிவகார்த்திகேயன் கண்டனம்
திரையரங்கில் வெளிவராத ஒரு படத்தை இணையத்தில் வெளியிடுவது முற்றிலும் சட்டவிரோதம் ஆகும். மேலும் இந்த படத்தில் நடித்த விஜய், மற்ற நடிகர்கள், இயக்குநர் ஆகியோரின் உழைப்பு வீணானதுடன், பல ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது. ஜனநாயகன் படத்தை கசிய விட்ட நபர்கள் மீது சிபிசி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தயாரிப்பாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. மேலும் நடிகர்கள் சூர்யா, சிவகார்த்திகேயன் ஆகியோரும் ஜனநாயகன் படம் லீக் ஆனதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஜனநாயகன் படத்தை கசிய விட்டது விஜய்யா?
இந்த நிலையில், ஜனநாயகன் படத்தை விஜய்யே கசிய விட்டு கலவரம் ஏற்படுத்த முயல்வதாக இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் போலீசில் பரபரப்பு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது ஜனநாயகன் படம் தொடர்பாக இணையத்தில் கசிந்த ஒரு காட்சியில், 'திருவிழாவில் பொது மக்கள் கூடும் இடத்தில் முஸ்லிம் குண்டு வைப்பது போல் காட்சி வருகிறது. முஸ்லிம் வெறுப்பு பிரசாரம் செய்யும் விஜய்யை கைது செய்ய வேண்டும்' என இந்திய தேசிய லீக் கட்சி புகாரில் கூறியுள்ளது.
முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதா?
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இந்திய தேசிய லீக் கட்சி கொடுத்த புகார் மனுவில், ''ஜோசப் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்பட முன்னோட்டம் என சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த முன்னோட்ட காட்சியில் வெடிகுண்டு செய்து ஊர் திருவிழாவில் பொது மக்கள் கூடும் இடத்தில் முஸ்லிம் குண்டு வைப்பது போல் காட்சி வருகிறது. ஏற்கனவே துப்பாக்கி, பீஸ்ட் போன்ற திரைப்படங்களில் முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து உள்ளார் ஜோசப் விஜய். ஜனநாயகன் திரைப்படம் வெளியாக இன்னும் சென்சார் போர்டு அனுமதி கொடுக்கவில்லை.
தவெகவினர், விஜய் ரசிகர்கள் பதிலடி
இருந்தும் தேர்தல் நேரத்தில் முஸ்லிம் வெறுப்பு பிரசாரம் செய்து தேர்தலை நிறுத்தவோ அல்லது வன்முறை நடத்தவோ ஜோசப் விஜய்யும், இப்படத்தினை இயக்கிய இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆகியோர் முயற்சி செய்வதாக தோன்றுகிறது. ஆகவே நடிகர் ஜோசப் விஜய் மற்றும், இயக்குநர் எச். வினோத், கே.வி.என் புரொடக்சன்ஸ் உரிமையாளர் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்'' என்ற கூறப்பட்டுள்ளது. விஜய் மீது உள்நோக்கத்துடன் இந்த கட்சி புகார் அளித்துள்ளதாக விஜய் ரசிகர்கள், தவெகவினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

