நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் லீக் ஆன விவகாரம் பேசு பொருள் ஆகி உள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து தயாரிப்பாளர் தனஞ்செயன் தன் ஆதங்கத்தை கொட்டி உள்ளார்.

Jana Nayagan Movie Leak : தளபதி விஜய், H. வினோத் இயக்கத்தில் நடிக்கும் 'ஜன நாயகன்' படத்தின் முக்கிய காட்சிகள் ஆன்லைனில் லீக் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் இன்ட்ரோ சீன், டைட்டில் கார்டு மற்றும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த "தளபதி கச்சேரி" பாடலின் சில பகுதிகள் முதலில் கசிந்தன. ஆனால் கொஞ்ச நேரத்தில் ஒட்டுமொத்த படத்தையுமே லீக் செய்துவிட்டார்கள். இதனால் விஜய் ரசிகர்கள் பேரதிர்ச்சி அடைந்தனர்.

இந்தியா டுடே செய்தியின்படி, படத்தின் எடிட்டிங் டேபிளில் இருந்துதான் இந்த காட்சிகள் கசிந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து படக்குழுவினர் இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால், விஜய் ரசிகர்களே சமூக வலைதளங்களில் இந்த வீடியோக்களைப் பரப்ப வேண்டாம் என்றும், இது சினிமா துறைக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

உண்மையில், இந்தப் படம் 2026 ஜனவரி 9-ம் தேதி பொங்கல் ரிலீஸாக வரவிருந்தது. ஆனால், சென்சார் போர்டு சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்ட தாமதத்தால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. லேட்டஸ்ட் தகவல்படி, 2026 மே அல்லது ஜூன் மாதம் படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில்தான், ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்யும் இந்த லீக் சம்பவம் நடந்துள்ளது.

ஆதங்கத்தை கொட்டிய தனஞ்செயன்

விஜய் அரசியலுக்குள் நுழைவதற்கு முன் நடிக்கும் கடைசிப் படம் என்பதால், 'ஜன நாயகன்' படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இதில், முன்னாள் போலீஸ் அதிகாரியும், முன்னாள் கைதியுமான வெற்றி கொண்டான் என்ற கதாபாத்திரத்தில் விஜய் நடிக்கிறார். விஜி என்ற பெண்ணை தத்தெடுத்து, அவளை ஒரு தைரியமான பெண்ணாக வளர்க்கும் அதே நேரத்தில், நாட்டுக்கு வரும் ஒரு பெரிய ஆபத்தை அவர் எதிர்கொள்வதுதான் படத்தின் கதை. இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், நரேன், பிரியாமணி, சுனில் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.

ஜனநாயகன் படம் லீக் ஆன நிலையில், நெட்டிசன்களுக்கு கோரிக்கை விடுத்து பிரபலங்கள் பலரும் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் தயாரிப்பாளர் தனஞ்செயன் போட்டுள்ள பதிவில், அந்த வீடியோவை போலி கணக்குகள் மூலம் ட்வீட்டுகளில் பகிரும் அனைவரையும் சைபர் செல்கள் உடனடியாக தடை செய்ய வேண்டும். ஜனநாயகன் குழு மற்றும் கேவிஎன் நிறுவனம் உடனடியாக புகார் அளித்து அந்த காட்சிகள் மேலும் பரவுவதை நிறுத்த வேண்டும். இயக்குநர் எச்.வினோத், அவர்களின் இன்ஸ்டாகிராம் பதிவை படித்தது மிகவும் வருத்தமாக உள்ளது. சதி கதைகளை நிறுத்துங்கள். தயவுசெய்து அந்த வீடியோக்களை ட்வீட்களிலும் ரீல்ஸ்களிலும் பகிர்வதை நிறுத்துங்கள் நண்பர்களே. தமிழ் சினிமாவின் வருவாயையும் எதிர்காலத்தையும் கொன்றுவிடாதீர்கள் என பதிவிட்டு உள்ளார்.

Scroll to load tweet…