Dosa King : ஜெய்பீம் இயக்குனரின் அடுத்த அதிரடி... சரவணபவன் ராஜகோபால் - ஜீவஜோதி கதையை படமாக்குகிறார் TJ ஞானவேல்
Jai Bhim Director TJ Gnanavel next movie : சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் படத்தை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனராக உயர்ந்த ஞானவேல், அடுத்ததாக இந்தியில் தோசா கிங் என்கிற படத்தை இயக்க உள்ளார்.
அசோக் செல்வன் நடித்த கூட்டத்தில் ஒருவன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் டி.ஜெ.ஞானவேல். இதையடுத்து சூர்யாவை வைத்து இவர் இயக்கிய ஜெய் பீம் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இப்படத்தை இயக்கி இருந்தார் ஞானவேல்.
இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தாலும், மறுபக்கம் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கியது. குறிப்பாக இப்படத்தில் வில்லனாக சித்தரிக்கப்படுபவர் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர் என்று காட்டப்பட்டு உள்ளதாக சர்ச்சை வெடித்தது. இதை எதிர்த்து பாமக-வினர் போராட்டம் நடத்தினர். இதற்காக சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். அதுமட்டுமின்றி சூர்யா மற்றும் இயக்குனர் ஞானவேல் மீது வழக்கும் தொடரப்பட்டது.
இதையும் படியுங்கள்... சினிமாவில் நடிக்க சென்ற பாக்யா... அதுவும் பிரபுதேவா உடன் - என்ன ரோல்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!
இவ்வாறு சர்ச்சைகளை சந்தித்தாலும் இப்படத்திற்கு சர்வதேச அளவில் சில அங்கீகாரங்களும் கிடைத்தன. குறிப்பாக ஆஸ்கரின் அதிகாரப்பூர்வ யூடியூப் தளத்தில் ஜெய் பீம் பட காட்சிகள் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தன. அத்தகைய அங்கீகாரத்தை பெற்ற முதல் இந்திய படம் என்கிற பெருமையை ஜெய்பீம் பெற்றிருந்தது. அதுமட்டுமின்றி பல்வேறு சர்வதேச பட விழாக்களிலும் இப்படம் விருதுகளை வென்றுள்ளது.
இந்நிலையில், இயக்குனர் ஞானவேல் இயக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்திற்கு தோசா கிங் என பெயரிடப்பட்டு உள்ளது. இந்தியில் தயாராக உள்ள இப்படத்தின் மூலம் பாலிவுட்டில் இயக்குனராக அறிமுகமாக உள்ளார் ஞானவேல்.
இப்படம் தமிழ்நாட்டில் பரபரப்பாக பேசப்பட்ட சரவண பவன் ராஜகோபால் - ஜீவஜோதி இடையே 18 ஆண்டுகளாக நடந்த வழக்கை மையமாக வைத்து உருவாக உள்ளதாம். ஜெய் பீம் போன்றே இதுவும் உண்மை கதையை மையமாக வைத்து உருவாக உள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இதையும் படியுங்கள்... திருத்தணி முருகன் கோவிலுக்கு காவடி எடுத்த நடிகை ரோஜா... மக்களோடு மக்களாக நடந்து வந்து வேண்டுதலை நிறைவேற்றினார்