அடுத்தடுத்து ஐடி ரெய்டில் சிக்கும் அன்புச்செழியன் - யார் இவர்?... சினிமாவில் இவரின் பங்களிப்பு என்ன?
G.N.Anbu Chezhiyan : சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் நேற்று தொடங்கப்பட்ட ஐடி ரெய்டு, 24 மணிநேரங்களை கடந்து 2-வது நாளான இன்றும் நடைபெற்று வருகிறது.
சினிமா பைனான்சியராக வலம் வரும் அன்புச்செழியன் வீடு மற்றும் அலுவலகங்களில் நேற்று முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையானது 24 மணிநேரங்களைக் கடந்து இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிரது. சென்னை மற்றும் மதுரையில் அன்புச்செழியனுக்கு சொந்தமான 40 இடங்களில் ஐடி ரெய்டு நடைபெற்று வருகிறது.
இவர் ஐடி ரெய்டில் சிக்குவது இது முதல்முறை அல்ல, இதற்கு முன் கடந்த 2020-ம் ஆண்டும் இதேபோல் இவருக்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு நடத்தப்பட்டது. அப்போது ஏராளமான ஆவணங்கள் சிக்கியதாக சொல்லப்பட்டது. ஆனால் அவற்றின் மீதான நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பது இன்றளவும் கேள்விக்குறியாகவே உள்ளது.
இராமநாதபுரத்தை சேர்ந்த அன்புச் செழியன், ஆரம்ப காலகட்டத்தில் அங்குள்ள பழ வியாபாரிகளுக்கு சிறிய அளவில் கந்துவட்டிக்கு பணம் கொடுத்து வந்துள்ளார். பின்னர் மதுரைக்கு வந்த அவர், சிறு பட்ஜெட் படங்களுக்கு பைனான்ஸ் வழங்கி வந்துள்ளார். இதன்பின் அசுர வளர்ச்சி கண்ட அன்புச்செழியன், கோலிவுட்டில் ஆளுமை செலுத்த தொடங்கினார்.
இதையும் படியுங்கள்...யுவனுடன் சேர்ந்து செம்ம டூயட் சாங்... விருமன் மூலம் பாடகியாகவும் அறிமுகமான அதிதி ஷங்கர் - வைரலாகும் கிளிம்ப்ஸ்
கோலிவுட்டில் தயாராகும் 70 முதல் 80 சதவீத படங்களுக்கு இவர் தான் பைனான்சியர் என்றும் சொல்லப்படுகிறது. எந்த ஒரு திரைப்படம் ரிலீசாக வேண்டும் என்றாலும் அதற்கு அன்புச்செழியனின் தயவு நிச்சயம் தேவை என்கிற நிலைதான் தற்போது தமிழ் சினிமாவில் உள்ளதாம். அந்த அளவுக்கு சினிமா தயாரிப்பாளர், விநியோகஸ்தர், பைனான்சியர் என கோலிவுட்டில் கொடிகட்டிப் பறக்கிறார் அன்புச்செழியன்.
இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக கடந்த 2017-ம் ஆண்டும் நடிகர் சசிகுமாரின் சகோதரர் அசோக் குமார் என்பவர் தற்கொலை செய்தபோது அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில் அன்புச் செழியன் பெயரும் இடம்பெற்று இருந்தது. இதையடுத்து இந்த விவகாரத்தில் அன்புச்செழியன் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.
இவ்வாறு பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினாலும், தமிழ் சினிமாவில் இவரது ஆதிக்கம் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இவர் சில அரசியல் பிரபலங்களில் பினாமியாகவும் உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்டு வரும் ஐடி ரெய்டிலும் கட்டுகட்டாக பணம் சிக்கியதாக சொல்லப்படுகிறது. ஆனால் அது எந்த அளவுக்கு உண்மை என்பது பின்னர் தான் தெரியவரும்.
இதையும் படியுங்கள்...பொன்னியின் செல்வன் படவிழாக்களுக்கு தொடர்ந்து ஆப்சென்ட் ஆகும் விக்ரம்.. பின்னணியில் இப்படி ஒரு பிரச்சனை இருக்கா