- Home
- Cinema
- Ilaiyaraaja : இசைஞானி இளையராஜா தெரியும்... போட்டோகிராஃபர் இளையராஜா தெரியுமா? யாரும் அறிந்திடாத ராஜாவின் மறுபக்கம்
Ilaiyaraaja : இசைஞானி இளையராஜா தெரியும்... போட்டோகிராஃபர் இளையராஜா தெரியுமா? யாரும் அறிந்திடாத ராஜாவின் மறுபக்கம்
Ilaiyaraaja Hidden Photography Talent : இளையராஜாவை இசையமைப்பாளராக அனைவரும் அறிந்திருப்பீர்கள், அவருக்குள் ஒளிந்திருக்கும் ஃபோட்டோகிராஃபி திறமையை பற்றி இங்கே பார்க்கலாம்.

Ilaiyaraaja Hidden Photography Talent
தமிழ் திரையுலகில் இசைஞானியாகப் போற்றப்படும் இளையராஜா, தனது இசையின் மூலம் பல தலைமுறை ரசிகர்களைக் கவர்ந்தவர். ஆயிரக்கணக்கான பாடல்களுக்கும் திரைப்படங்களுக்கும் இசையமைத்து தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியுள்ள இவர், இசையைத் தாண்டியும் பல்வேறு கலைகளில் ஆர்வம் கொண்டவர். அந்த வகையில், புகைப்படக் கலையிலும் தனக்கு இருந்த ஆர்வம் எப்படி உருவானது என்பது குறித்து அவர் பகிர்ந்துள்ள சுவாரஸ்யமான அனுபவம் தற்போது கவனம் பெற்றுள்ளது.
சமீபத்திய நேர்காணல் ஒன்றில் இளையராஜாவிடம் புகைப்படக் கலை மீதான ஆர்வம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, தனக்குள் இருந்த புகைப்படக் கலை ஆர்வத்தை முதலில் அடையாளம் கண்டு ஊக்கப்படுத்தியவர் இயக்குநர் பாலுமகேந்திராதான் என்று அவர் தெரிவித்துள்ளார்.
காஞ்சி பெரியவரைச் சந்திக்கச் சென்றபோது நடந்த சம்பவம்!
ஒருமுறை காஞ்சி பெரியவரைச் சந்திப்பதற்காக வட இந்தியாவில் உள்ள சதாரா என்ற பகுதிக்குச் சென்றிருந்தாராம் இளையராஜா. அப்போது ஸ்ரீரங்கம் கோபுரப் பணிகளுக்காக நிதி திரட்டுவது உள்ளிட்ட பணிகளிலும் அவர் ஈடுபட்டிருந்தார். அந்தப் பயணத்தின்போது யாருடைய கேமராவோ ஒன்றை எடுத்துக்கொண்டு சென்றுள்ளார். அதிகாலையில் காஞ்சி பெரியவர் எழுந்து ஆன்மிகப் பயணமாகச் சென்றபோது, அவருடன் இளையராஜாவும் ஓவியர் சிற்பி உள்ளிட்ட சிலரும் சென்றுள்ளனர். அப்போது அதிகாலை நேரத்தில் இயற்கையான வெளிச்சத்தில், ஒரு பாறையின் மீது அமர்ந்து காஞ்சி பெரியவர் ஜெபம் செய்யும் காட்சியைப் பார்த்த இளையராஜா, உடனடியாக அந்தத் தருணத்தை தனது கேமராவில் பதிவு செய்துள்ளார்.
இளையராஜாவின் புகைப்படத்தைப் பார்த்து வியந்த பாலுமகேந்திரா!
அந்தப் புகைப்படத்தை எடுத்த பிறகு பிரிண்ட் செய்து பார்த்த இளையராஜாவுக்கே அதன் அழகு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய பாரம்பரிய ஓவியம் ஒன்றைப் பார்ப்பது போன்ற உணர்வை அந்தப் படம் கொடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார். இதனால் அந்தப் புகைப்படத்தை தனது இசையமைக்கும் அறையில் அழகாகப் பிரேம் செய்து வைத்துள்ளார். ஒருமுறை அங்கு வந்த இயக்குநர் பாலுமகேந்திரா, அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு அது குறித்து விசாரித்துள்ளார்.
இளையராஜா எடுத்த புகைப்படம் என்பதை அறிந்ததும், அதன் கலைநயத்தைப் பாராட்டிய பாலுமகேந்திரா, புகைப்படக் கலையை மேலும் கற்றுக்கொள்ளும் வகையில் அவருக்கு ஒரு புத்தகத்தையும் வழங்கியுள்ளார். அதில் சிறந்த புகைப்படங்களை உருவாக்குவதற்கான பத்து முக்கியமான வழிமுறைகள் இடம்பெற்றிருந்ததாக இளையராஜா நினைவுகூர்ந்துள்ளார்.
பாலுமகேந்திரா கொடுத்த ஊக்கம்தான் தொடக்கம்!
பாலுமகேந்திராவின் பாராட்டும், அவர் வழங்கிய புத்தகமும் புகைப்படக் கலையின் மீது இளையராஜாவுக்கு இருந்த ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளன. அதன் பிறகுதான் சொந்தமாக கேமரா வாங்கி, தொடர்ந்து புகைப்படங்கள் எடுக்கத் தொடங்கியதாக அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு இசையமைப்பாளர் இளையராஜாவின் புகைப்படக் கலைப் பயணத்திற்குப் பின்னால் இயக்குநர் பாலுமகேந்திரா இருந்த சுவாரஸ்யமான தகவல் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
Cinema Story: ரஜினியை இயக்க இருந்த இளையராஜா… பெயரையும் வைத்துவிட்டு படத்தை இயக்காமல் போனது ஏன்?
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.





