ரெட் ஜெயண்ட்ஸ் CEO-வாக பொறுப்பேற்கும் இன்பநிதி..? முதல் படமே லோகேஷ் கனகராஜ் உடனா?
உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதி, ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Red Giant Movies CEO Inbanithi?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பேரனும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மகனுமான இன்பநிதி, சமீபகாலமாக திமுகவின் கட்சி நிகழ்ச்சிகளில் அவ்வப்போது தலைகாட்டி வருகிறார். முன்னதாக இந்த ஆண்டு நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அவர் தன் தந்தை உதயநிதியோடு பங்கேற்றது பேசு பொருள் ஆனது. ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில் நிதி நிர்வாகம் தொடர்பாக பட்டப்படிப்பை முடித்திருக்கும் இன்பநிதிக்கு தற்போது 21 வயது ஆகிறது. இதனிடையே அவருக்கு அண்மையில் கலைஞர் டிவியில் நிர்வாகப் பொறுப்பு வழங்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
இன்பநிதிக்கு வழங்கப்பட்ட பொறுப்பு
கலைஞர் டிவியில் தலைமை நிதி அதிகாரியாக முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலினின் சகோதரி மகன் கார்த்திகேயன் இருந்து வருகிறார். சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் இருந்து நாள்தோறும் காலை 11 மணிக்கு அண்ணா அறிவாலயம் வரும் இன்பநிதி, மாலை 5.30 மணிக்கு வீடு திரும்புவதாக கூறப்படுகிறது. திமுகவின் அடுத்த தலைமையாக உதயநிதி ஸ்டாலின் முன்னிருத்தப்பட்டு வரும் நிலையில், கலைஞர் தொலைக்காட்சியில் அவரது மகன் இன்பநிதிக்கு பொறுப்பு வழங்கப்பட்டது மிகப்பெரிய அளவில் பேசு பொருள் ஆனது.
ரெட் ஜெயண்ட் சிஇஓ ஆகும் இன்பநிதி?
இந்த நிலையில், தற்போது இன்பநிதி பற்று மேலும் முக்கியத் தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி உதயநிதி ஸ்டாலின் நிர்வகித்து வந்த ரெட் ஜெயண்ட் மூவீஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இன்பநிதி பொறுப்பேற்று உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி இருக்கிறது. தன் தந்தையைப் போல இன்பநிதியும் சினிமா படங்களை தயாரிக்க உள்ளதாகவும் அதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இன்பநிதி பொறுப்பேற்ற பின் அவர் தயாரிக்க உள்ள படம் பற்றிய அப்டேட் ஒன்றும் கசிந்துள்ளது.
இன்பநிதி தயாரிக்கும் முதல் படம் இதுவா?
அதன்படி தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் இயக்குனராக கருதப்படும் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தை தான் இன்பநிதி முதலில் தயாரிக்க உள்ளாராம். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள கூலி திரைப்படம் வெற்றிநடைபோட்டு வரும் நிலையில், அவர் அடுத்ததாக ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனை வைத்து ஒரு கேங்ஸ்டர் படத்தை இயக்க உள்ளாராம். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ரெட் ஜெயண்ட் நிறுவனமும் தயாரிக்க உள்ளதாம். இதுபற்றி அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.