ஒரே நாளில் போடப்பட்ட டியூன்.. விஜயகாந்துக்காக பிளைடில் பறந்த பாடல் - மெய்சிலிர்க்க வைத்த இளையராஜா!
Ilayaraja : பிரபல இசையமைப்பாளர் இளையராஜா இசையில் வெளியான பல பாடல்களுக்கு பின்னால் ஒரு சுவாரசியமான கதை உள்ளது என்றே கூறலாம்.
Actor Vijayakanth
தமிழ் சினிமாவை பொறுத்தவரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், உலக நாயகன் கமல்ஹாசனும் மிகப்பெரிய நடிகர்களாக உருவெடுத்து வந்த காலத்தில் கலை உலகில் வில்லனாக அறிமுகமாகி, மிகச்சிறந்த ஹீரோவாகவும், அரசியல் தலைவராகவும் வாழ்ந்து மறைந்துள்ளார் கேப்டன் விஜயகாந்த் என்றால் அது மிகையல்ல. கடந்த 1979ம் ஆண்டு தமிழில் வெளியான "இனிக்கும் இளமை" என்கின்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்து தான் தனது கலை உலக பயணத்தை தொடங்கினார் அவர்.
தொடர்ச்சியாக "நீரோட்டம்", "தூரத்தில் இடி முழக்கம்", "அகல்விளக்கு" போன்ற திரைப்படங்களில் அவர் சிறு சிறு கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து வந்த நிலையில், கடந்த 1981ம் ஆண்டு வெளியான "சட்டம் ஒரு இருட்டறை" என்கின்ற திரைப்படத்தில் "விஜய்" என்ற கதாபாத்திரத்தில் நடித்து ஆக்சன் நாயகனாக தமிழ் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். தொடர்ச்சியாக அவருடைய நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் மெகா ஹிட் திரைப்படங்களாக மாறியது.
Vijayakanth
இசைஞானி இளையராஜாவை பொருத்தவரை 80களின் துவக்கத்திலிருந்து இப்போது வரை, கோலிவுட்டின் டாப் நடிகர்களாக இருக்கும் அனைவருக்குமே நல்ல பல பாடல்களை கொடுத்துள்ளார். அந்த வகையில் நடிகர் விஜயகாந்திற்கும் பல மெகா ஹிட் வெற்றி திரைப்படங்களை கொடுத்தவர் இளையராஜா. குறிப்பாக விஜயகாந்தின் வெற்றிக்கு வித்திட்ட "அம்மன் கோவில் கிழக்காலே", "பூந்தோட்ட காவல்காரன்", "நானே ராஜா நானே மந்திரி", "வைதேகி காத்திருந்தாள்", "சிறையில் பூத்த சின்ன மலர்" மற்றும் "சின்ன கவுண்டர்" போன்ற அனைத்து வெற்றி திரைப்படங்களுக்கும் இசை அமைத்தது இளையராஜா தான்.
அந்த வகையில் கடந்த 1991ம் ஆண்டு வெளியாகி விஜயகாந்திற்கு மெகா ஹிட்டான ஒரு திரைப்படத்திற்கு இசையமைத்து, மீண்டும் விஜயகாந்தின் புகழை உச்சிக்கே கொண்டு சென்றார் இளையராஜா என்றால் அது மிகையல்ல. அதுவும் அந்த படத்தில் பல சுவாரசியமான சம்பவங்களும் கூட ஒளிந்திருக்கிறது என்றே கூறலாம்.
Captain Vijayakanth
பிரபல இயக்குனர் ஆர்.கே செல்வமணி இயக்குனராக அறிமுகமானது கடந்த 1990ம் ஆண்டு வெளியான நடிகர் விஜயகாந்தின் "புலன் விசாரணை" என்ற திரைப்படத்தின் மூலம் தான். மக்கள் மத்தியில் அந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், 1991ம் ஆண்டு மீண்டும் விஜயகாந்திற்காக ஆர்.கே செல்வமணி உருவாக்கிய திரைப்படம் தான் "கேப்டன் பிரபாகரன்". இந்த திரைப்படம் விஜயகாந்தின் 100வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்ல இந்த படத்தில் இருந்து தான் விஜயகாந்த் "கேப்டன்" விஜயகாந்த் என்கின்ற பெயருக்கு சொந்தக்காரர் ஆனார்.
இப்படத்தில் வரும் பல ஸ்டாண்ட் காட்சிகளை, சில சமயங்களில் ரோப் கூட பயன்படுத்தாமல் அவர் செய்து முடித்ததாக செல்வமணி பல மேடைகளில் வியந்து விஜயகாந்தை பாராட்டுகிறார். மேலும் இந்த திரைப்படத்தில் இரண்டே இரண்டு பாடல்கள் தான் அமைக்கப்பட்டது, ஆனால் அதிலும் தனது விதையை காட்டியிருப்பார் இளையராஜா. இளையராஜாவை அணுகிய ஆர்.கே செல்வமணி தனக்கு ஹிந்தியில் வெளியான "ஷோலே" திரைப்படத்தில் வரும் ஒரு பாடலைப் போன்ற பாடல் ஒன்று வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.
Captain Prabhakaran
அதுவும் ஒரே ஒரு நாள் அவகாசம் தான் இருக்கிறது, உடனே அந்த பாட்டின் ஷூட்டிங் எடுத்தே ஆகவேண்டும் என்று அவசர அவசரமாக கூற, இரவோடு இரவாக பாடலாசிரியர் பிறைசூடனிடம் மெட்டை கொடுத்து, அதற்கு வரிகள் வாங்கி, பாடலுக்கான ட்ராக் ரெடி செய்து அதை விமானத்தில் அனுப்ப, அதற்கு மயக்கும் குரலுக்கு சொந்தக்காரரான ஸ்வர்ணலதாவை பாடவைத்து அடுத்த நாள் அந்த பாடல் ஷூட்டிங்கிற்கு சென்றுள்ளது. அந்த பாடல் தான் காலம் கடந்தும் இன்றும் ரசிக்கப்படும் "ஆட்டமா தேரோட்டமா" என்ற பாடல்.
உண்மையில் மிக நேர்த்தியாக இளையராஜா அமைத்த பல பாடல்களில் இந்த பாடலும் காலம் கடந்து நிற்கிறது. குறிப்பாக பாடலாசிரியர் பிறைசூடன் மற்றும் ஸ்வர்ணலதா காம்பினேஷனில் உருவான மிகவும் தனித்துவமான பாடல் இது என்றே கூறலாம்.
14 வயதில் பாடகி... திருமணம் செய்துகொள்ளாமல் 37 வயதில் உயிரிழந்த சுவர்ணலதா பற்றிய அரிய தகவல்கள்!