கோடிகளில் புரளும் இளையராஜா! நம்ம ‘இசைஞானி’ இத்தனை கோடிக்கு அதிபதியா?
இசைஞானி இளையராஜா இன்று தனது 82வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரின் வியக்க வைக்கும் சொத்து மதிப்பு பற்றி பார்க்கலாம்.

Ilaiyaraaja NetWorth
இசைஞானி இளையராஜா 1943-ம் ஆண்டு ஜூன் மாதம் 3ம் தேதி தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில் பிறந்த ராசையா இன்று 82 வயதிலும் ஈடு இணையற்ற இசையின் ராஜாவாக திகழ்கிறார். இவர் ஜூன் 3ம் தேதி பிறந்தாலும் கருணாநிதி அன்றைய தினம் பிறந்தநாள் கொண்டாடுவதால் அவரின் மீதுள்ள மரியாதையால் தன்னுடைய பிறந்தநாளை ஜூன் 2ம் தேதி கொண்டாடி வருகிறார் இளையராஜா.
இசைத் தென்றலாய் வீசிய இளையராஜாவின் பாடல்கள்
1969-ம் ஆண்டு வாக்கில் சினிமாவில் இசையமைக்கும் ஆவலோடு சென்னைக்கு வந்த இளையராஜாவுக்கு நாட்டுப்புற பாடல்களும், ஹார்மோனியம் வாசிப்பது மட்டுமே திரையுலகில் சாதிக்க போதாது என்பது புரிந்து, தன்ராஜ் மாஸ்டரிடம் முறையாக, பியானோ மற்றும் கிட்டார் கற்றுக் கொண்டு, இசைக்குழுக்களில் பங்கேற்ற ராஜா, அன்னக்கிளி படம் மூலம் அறிமுகமாகி இசையின் ராஜாவாக உள்ளங்கள் தோறும் இசைத் தென்றலாய் வீசினார்.
பிஜிஎம் கிங் இளையராஜா
ஆயிரக்கணக்கான பாடல்கள், படங்களில் முத்திரை பதிக்கும் பின்னணி இசை, என காலத்தால் மறக்க முடியாத, இசையை தந்தது இளையராஜாவின் ஹார்மோனிய பெட்டி. இன்று வரை அவரது உற்ற தோழனாக அதுவே திகழ்கிறது. இளையராஜாவின் இசைக்காகவே சக்கைப்போடு போட்ட திரைப்படங்கள் ஏராளம். இளையராஜாவின் விரல்களால் மட்டுமின்றி குரல்களாலும் மெருகேறிய பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதில் ரிங்காரமிட்டுக் கொண்டு இருக்கின்றன.
சிம்பொனி இசையிலும் உச்சம் தொட்ட இளையராஜா
திரையிசை பாடல்கள் மட்டுமின்றி சிம்பொனி இசை மூலம் இமயம் தொட்ட இளையராஜாவுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள், பறந்து விரிந்து இருக்கின்றனர். திரைப்படங்களுக்கு இளையராஜா இசையமைக்க வேண்டும் என்றில்லை, ஏற்கனவே அவர் இசையில் வெளியான பாடல்களை மீண்டும் பயன்படுத்தினாலே போதும், படம் வெற்றிபெறும் என்கிற நம்பிக்கையை கொடுத்துள்ளது ராஜாவின் இசை.
இளையராஜா சொத்து மதிப்பு
இளையராஜா இன்று 82வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு இசை ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள். அவரை வாழ்த்தி சோசியல் மீடியாவில் பதிவுகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில், அவரின் சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி அவரின் சொத்து மதிப்பு ரூ.150 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. இவர் ஒரு படத்திற்கு இசையமைக்க ரூ.2 முதல் 3 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார். இதுதவிர உலகம் முழுவதும் இசைக் கச்சேரி நடத்தி அதன் மூலம் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டி வருகிறார் ராஜா.