‘இசையின் ராஜா’வுக்கு பிறந்தநாள்; இளையராஜாவின் வியத்தகு இசைப்பயணம் ஒரு பார்வை
இசைஞானி இளையராஜா இன்று தனது 82வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரின் வியத்தகு இசைப்பயணம் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Ilaiyaraaja Birthday
இளையராஜா இந்திய சினிமாவின் சினிமா முகவரி. தமிழ் திரை இசைக்கு வெள்ளித்திரையில் கம்பீரம் கூட்டிய இசை சாம்ராஜ்ஜியம். ஸ்வரங்களாலும், மெட்டுக்களாலும் இளையராஜா கட்டமைத்த இசை எனும் பெரும் கோட்டை, உலக மக்களின் கனவு தேசமாகவே வரலாறு கடந்து கம்பீரமாக காட்சி அளிக்கிறது. அன்னக்கிளியில் தொடங்கிய ராஜாவின் ராஜாங்கம், மெல்லிய காற்றாய் தமிழர்களின் இதயங்களை நீவி இருக்கிறது.
மொத்தத்தில் கடந்த 45 ஆண்டுகளாக தமிழர்களின் வாழ்வில் ஊறிப்போய், மக்களின் வாழ்க்கையை செதுக்கிக் கொண்டே பயணிக்கிறது இளையராஜாவின் இசை. கம்யூனிஸ்ட் கட்சியின் பாடகராக இருந்த அண்ணன், பாவலரின் மடியில் இளையராஜா இசைப் பயின்றாலும், தன்ராஜ் மாஸ்டரே இளையராஜாவுக்கு இசை நுணுக்கங்களை கற்றுக் கொடுத்து, மெருகேற்றினார்.
இளையராஜாவின் இசைப்பயணம்
எம்.எஸ்.விஸ்வநாதனின் இசைக்குழுவில் இணைய வேண்டும் என்பது இளையராஜாவின் மிகப்பெரிய விருப்பம். அதற்கான வாய்ப்பு கிடைக்காததால் ஜிகே வெங்கடேஷின் குழுவில் இணைந்தார். பின்னர் சலீல் செளத்ரி என்ற மகா உன்னத கலைஞன், மடியில் இருந்து தொடங்கியது இளையராஜாவின் திரை இசை பயணம்.
செம்மீன் போன்ற படங்களில் சலீல் செளத்ரியின் இசைப்பிண்ணனி, அன்னக்கிளியில் ராஜாவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியதை காண முடியும். தமிழ் திரைப்படங்களில் பின்னணி இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து, ரசிகர்களை கட்டிப்போட்ட வித்தைக்காரர் இளையராஜா. மணிரத்னம் இயக்கத்தில் இளையராஜா இசையில் வெளியான மெளன ராகம் படத்தின் பின்னணி இசை, காலம் கடந்து காதலை இன்றளவும் கடத்திக் கொண்டு இருக்கிறது.
இளையராஜாவின் மேஜிக்
இளையராஜா - எஸ்.பி.பி-யின் நட்பு, திரையில் நிகழ்த்திய மேஜிக், கால் நூற்றாண்டுகளாக மக்களை இசையால் கட்டிப்போட்டது என்றே சொல்லலாம். உதிரிப்பூக்கள், உள்ளிட்ட திரைப்படங்களில் இயக்குனர் மகேந்திரன் உடனும், மூடுபனி, மூன்றாம் பிறை உள்ளிட்ட படங்களில் பாலு மகேந்திரா உடனும், 16 வயதினிலே, முதல் மரியாதை போன்ற பாரதிராஜாவின் படங்களில் இளையராஜா இசை சக்கரவர்த்தியாக கோலோச்சி இருந்தார்.
இளையராஜா பிறந்தநாள்
நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த், மோகன், ராமராஜன் ஆகியோரின் சினிமா வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றதில் இளையராஜாவின் பங்கு அதீதம் இருக்கிறது. வடக்கத்திய இசை ஆதிக்கம் செலுத்திய ஒரு காலகட்டத்தில், தனி ஒரு கலைஞனாக இருந்து தமிழ் சினிமாவில் இசையை செழிக்க செய்ததிலும், இசையை மக்களுக்கு நெருக்கம் ஆக்கியதிலும் முக்கியமானவர் இளையராஜா.
இசையின் ராஜாவாக தமிழ் மக்களின் மனதில் கோலோச்சிய இந்த இசை நாயகனின் 82வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவருக்கு இசை ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள். அவர்களோடு சேர்ந்து நாமும் வாழ்த்துவோம்.