வனிதாவுக்கு ஒருவாரம் தான் டைம்; இளையராஜா தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் அதிரடி உத்தரவு
மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தில் தான் இசையமைத்த பாடலை அனுமதியின்றி பயன்படுத்தி இருப்பதாக இசைஞானி இளையராஜா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Mrs and Mr Movie Song Copyright Issue
வனிதா விஜயகுமார் இயக்கத்தில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் மிஸஸ் அண்ட் மிஸ்டர். இப்படத்தை வனிதாவின் மகள் ஜோவிகா தான் தயாரித்து இருந்தார். இப்படத்தில் வனிதாவுக்கு ஜோடியாக அவரின் முன்னாள் காதலர் ராபர்ட் நடித்திருந்தார். இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருந்தார். இதில் கிரண் மற்றும் ராபர்ட் இருவரும் ஆடும் பாடல் காட்சி உள்ளது. அந்த பாடலுக்காக மைக்கேல் மதன காமராஜன் படத்திற்காக இளையராஜா இசையமைத்த சிவராத்திரி என்கிற பாடலை பயன்படுத்த முடிவு செய்த படக்குழு, அதற்காக சோனி மியூசிக் நிறுவனத்திடம் அனுமதியும் வாங்கி உள்ளது.
வனிதா படம் மீது வழக்கு தொடர்ந்த இளையராஜா
அதேபோல் தான் இளையராஜாவை நேரில் சந்தித்தும் இந்த பாடலுக்கு அனுமதி கோரியதாக வனிதா கூறி இருந்தார். ஆனால் படம் ரிலீஸ் ஆன தினத்தன்று, மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தில் தன்னுடைய அனுமதியின்றி தான் இசையமைத்த பாடல் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக கூறி இளையராஜா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த வனிதா, இளையராஜா தன்மீது வேண்டுமென்றே வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறியதோடு, அவரை தான் கடவுளாக பார்ப்பதாகவும், கடவுளே தன் மீது கோபப்பட்டால் என்ன செய்வது என கூறி பேட்டியின்போதே கண்ணீர்விட்டு அழுதார்.
இளையராஜா வீட்டு மருமகளா? வனிதா கொடுத்த விளக்கம்
அதுமட்டுமின்றி அந்த பேட்டியில் ஒரு குண்டு ஒன்றையும் தூக்கிப் போட்டார் வனிதா. அது என்னவென்றால், தான் இளையராஜா வீட்டுக்கு மருமகளாக செல்ல வேண்டியவள் என்றும், இளையராஜா மனைவியின் கையால் அந்த வீட்டு லாக்கர் சாவியை வாங்கி அங்கிருந்த நகைகளை எடுத்து தான் அம்மனுக்கு பூஜையெல்லாம் செய்திருக்கிறேன் என்று கூறி இருந்தார். இதைக்கேட்டு ஷாக் ஆன ரசிகர்கள், அப்போ வனிதா திருமணம் செய்ய இருந்தது கார்த்திக் ராஜாவையா? அல்லது யுவன் சங்கர் ராஜாவையா? என கேள்வி எழுப்ப தொடங்கினர். பின்னர் அதுபற்றி வனிதாவே தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் விளக்கம் அளித்தார்.
வனிதாவுக்கு ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவு
அதன்படி கார்த்திக் ராஜா மற்றும் அவருடைய மனைவி இருவருமே தன்னுடைய நெருங்கிய நண்பர்கள், அவரின் பெயரை இந்த பிரச்சனைக்குள் கொண்டுவர வேண்டாம். ராஜா அப்பா எனக்கு கடவுள் மாதிரி. என்னையும் அவரின் வீட்டில் ஒருத்தியாக தான் நடத்தினார்கள். எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதை சட்டப்படி எதிர்கொள்வேன் என்று வனிதா பதிவிட்டிருந்தார். இந்த நிலையில், இளையராஜா தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி இந்த பாடல் காப்பிரைட் விவகாரம் தொடர்பாக ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என வனிதாவுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. அவர் என்ன விளக்கம் கொடுக்கப்போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.