Ilayaraja - Gangai Amaran : தெய்வ அருளால் நிகழ்ந்தது! இளையராஜா உடனான சந்திப்பு குறித்து கங்கை அமரன் நெகிழ்ச்சி
எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி அண்ணனுடன் சேர்ந்திருக்கிறேன். இனி அவர் என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்வேன் என்று கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் இசை அமைப்பாளர், பாடலாசிரியர், திரைக்கதை ஆசிரியர், நடிகர், திரைப்பட இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்கியவர் கங்கை அமரன் (Gangai Amaran). இசையமைப்பாளர் இளையராஜாவின் சகோதரரான இவர், கடந்த 1982-ம் ஆண்டு வெளியான கோழி கூவுது படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இவர் இயக்கிய பெரும்பாலான படங்களுக்கு இசையமைத்தது இளையராஜா தான்.
அண்ணன் இளையராஜாவோடு ஏராளமான படங்களில் பணியாற்றி இருந்தாலும் இவர்கள் இருவருக்கிடையே அவ்வப்போது கருத்து வேறுபாடு ஏற்படுவதுண்டு. சில சமயங்களில் இளையராஜாவை ஊடகங்கள் வாயிலாகவே கங்கை அமரன் (Gangai Amaran) விமர்சித்திருக்கிறார். குறிப்பாக எஸ்.பி.பி.யிடம் காப்பிரைட் கேட்டு இளையராஜா (ilaiyaraja) நோட்டீஸ் அனுப்பியதை கங்கை அமரன் கடுமையாக சாடினார்.
கடந்த 13 ஆண்டுகளாக இளையராஜாவுடன் எந்தவித பேச்சுவார்த்தையும் இல்லாமல் இருந்து வந்துள்ளார் கங்கை அமரன். குடும்ப நிகழ்ச்சிகளிலும் கூட இருவரும் சந்தித்துக் கொண்டதில்லையாம். இருப்பினும் இவர்களது மகன்கள் தொடர்ந்து நட்பு பாராட்டி வந்தனர்.
இந்நிலையில், 13 ஆண்டுகால விரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இளையராஜாவும், கங்கை அமரனும் அண்மையில் மீண்டும் இணைந்தனர். அவர்கள் இருவரும் சந்தித்துக் கொண்டபோது எடுத்த புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இவர்களது சந்திப்பை இருவரது குடும்பத்தினரும் கொண்டாடினர்.
இளையராஜா (ilaiyaraja) உடனான சந்திப்பு குறித்து கங்கை அமரன் (Gangai Amaran) நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: "நீண்ட நாட்களுக்குப் பிறகு என் அண்ணனை சந்தித்தேன். என்னைப் பற்றியும் என் உடல்நிலை பற்றியும் விசாரித்தார். சிறு வயதில் எப்படி இருப்பேன், என்னவெல்லாம் செய்தேன் என்பதைப் பற்றி ஒரு மணி நேரத்துக்கு மேல் பேசிக் கொண்டிருந்தார். என்னுடைய மனைவி இறந்தது குறித்தும் கேட்டறிந்தார்.
அவரது இசை இப்போது எப்படி இருக்கிறது என்பதை நான் அவரிடம் சொன்னேன். எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி அண்ணனுடன் சேர்ந்திருக்கிறேன். இனி அவர் என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்வேன். என் வாழ்க்கையில் இனி எல்லாமே என் அண்ணன் எடுக்கும் முடிவுதான். தெய்வ அருளால் இந்த சந்திப்பு நிகழ்ந்தது" என்றார்.
இதையும் படியுங்கள்.... BB Ultimate :அனிதாவிடம் டபுள் மீனிங்கில் பேசிய பாலா... கடுப்பான பிக்பாஸ் ரசிகர்கள் - வார்னிங் கொடுப்பாரா கமல்?