அடப்பாவிகளா.. சேட்டன்கள் நாட்டிலும் ரஜினி ஜுரம்..! பாலக்காட்டில் அடிபொலி
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171வது படமான 'கூலி' வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கேரளாவில் மட்டும் டிக்கெட் முன்பதிவில் ரூ.4.11 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘கூலி’ திரைப்படம் இன்று வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது. தீபாவளி பண்டிகை அக்டோபர் மாதம் தான் வரவுள்ள நிலையில், ரஜினி ரசிகர்களால் இன்றைய தினமே பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் மேளதாளங்களோடு உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.
ரஜினியின் 171வது திரைப்படமான இந்த திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் ஆமிர் கான், நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, சவுபின் ஷாயிர், ஸ்ருதிஹாசன், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற கூலி திரைப்படம் ஆக்ஷன் ரசிகர்களுக்காக செம மாஸாக படமானது வந்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் ரஜினிக்கு தமிழகத்தில் மட்டும் ரசிகர்கள் இல்லை.
உலகம் முழுவதும் பல நாடுகளில் ரஜினி ரசிகர்கள் கூலி திரைப்படத்தை கொண்டாடி வருகிறார்கள், குறிப்பாக கேரள ரசிகர்கள் யாருடைய படத்தையும் பெரிய அளவில் கொண்டாட மாட்டார்கள். ஆனால் ரஜினியின் கூலி திரைப்படத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள்.
கேரளா மாநிலம் பாலக்காட்டில் நடிகர் ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் வெளியானது. ரசிகர்கள் செண்டை மேளதாளத்துடன் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாலக்காட்டில் மட்டும் 15க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் தினசரி ஆறு காட்சிகள் வெளியிட கேரளா அரசு அனுமதி வழங்கி உள்ளது.
கேரளாவில் 'கூலி' படத்தின் டிக்கெட் முன்பதிவு மட்டும் சுமார் ரூ.4.11 கோடி வசூலித்துள்ளது. இதன் மூலம் 'எம்புரான்' மற்றும் 'லியோ' ஆகிய படங்களுக்கு அடுத்த இடத்தில் டிக்கெட் முன்பதிவில் கூலி படம் இடம்பெற்றுள்ளது.
'சிவாஜி, எந்திரன்' போன்ற படங்களுக்கு பிறகு கேரளாவில் ரஜினி படங்களுக்கு டிக்கெட் முன்பதிவு வேகமாக நடைபெறுவது கூலி படத்திற்கு தான் நிகழ்ந்துள்ளது என விநியோகஸ்தர் தெரிவிக்கின்றனர். செளபின் சாகிர் மலையாளத்தில் முக்கிய நடிகராக மாறி இருக்கிறார்.
பூஜா ஹெக்டோவோடு "மோனிகா" பாடலுக்கு நடனமாடி அசத்தியது கேரளாவில் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலக்காட்டிலுள்ள பிரியா திரையரங்கில் அதிகாலை 4 மணி முதலே காத்திருந்த ரசிகர்கள், தியேட்டர் கேட்டை எட்டிக்குதித்தும், திரையரங்கை நோக்கி, கூலிப்படத்தை பார்க்க வேகமாக ஓடிய காட்சிகளும் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.