பிரபல நடிகரை வைத்து... முன்னாள் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு செக் வைக்கும் தனுஷ்! நிலவும் கடும் போட்டி!
நடிகர் தனுஷ் தன்னுடைய முன்னாள் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு, பிரபல நடிகரை வைத்து செக் வைக்க உள்ளதாக வெளியாகி உள்ள சில தகவல்கள், கோலிவுட் திரையுலகில் அதிகம் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமாவில் நிறம், அழகு, போன்ற சில விஷயங்களை மீறி திறமையால் உயர்ந்து நின்ற நடிகர் தனுஷ். ஆரம்பத்தில், பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளான தனுஷ், பின்னர் தன்னை விமர்சித்தவர்களே மூக்கில் விரலை வைக்கும் அளவிற்கு அசுரத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி, தேசிய விருதுகளை வாங்கி குவித்தார்.
கோலிவுட் திரையுலகை தாண்டி, டோலிவுட், ஹாலிவுட், பாலிவுட் என கலக்கி வரும் தனுஷ் நடிப்பில், இன்று தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகி உள்ள திரைப்படம் 'வாத்தி'. படிப்பு என்பது குழந்தைகளுக்கு எந்த அளவுக்கு முக்கியம் என்பதை எடுத்து கூறும் விதமாக இப்படம் வெளியாகி, தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்த படத்தை தொடர்ந்து, தனுஷ் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் 'கேப்டன் மில்லர் ' படத்தில் நடிக்க உள்ளார். அதே போல், பா.பாண்டி படத்திற்கு பின்னர் எந்த படங்களையும் இயக்காமல் இருக்கும் தனுஷ், அடுத்ததாக திரைப்படம் ஒன்றை இயக்க உள்ளதாகவும், இந்த படத்தில் ஹீரோவாக விஷ்ணு விஷால் நடிக்க வாய்ப்புள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
தனுஷுடன் ஏற்கப்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த ஆண்டு தன்னுடைய விவாகரத்து முடிவை ஐஸ்வர்யா தனுஷ் அறிவித்த பின்னர், மீண்டும் திரைப்படங்கள் இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து, ஐஸ்வர்யா இயக்கும் 'லால் சலாம்' படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, ரஜினிகாந்த் சிறப்பு வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் அதிகார பூர்வ தகவல் வெளியானது.
இப்படத்தில் முதலில் அதர்வா கதாநாயகனாக நடிக்க கமிட் ஆன நிலையில், பின்னர் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடிக்க உள்ள தகவலை ஐஸ்வர்யா உறுதி செய்தார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், கொஞ்சம் ஓவராக ஷூட்டிங் ஸ்பாட்டில் ஐஸ்வர்யா ஆட்டிடியூட் காட்டி வருவதாகவும், எனவே இப்படத்தில் இருந்து விஷ்ணு விஷால் விலக முடிவு செய்துள்ளதாக சில தகவல்கள் வெளியானது.
இப்படி வெளியாகும் தகவல் குறித்து, எந்த அதிகார பூர்வ தகவலும் வெளியாகாத நிலையில்... விஷ்ணு விஷாலை வைத்தே தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு செக் வைக்க முயன்று வருவதாகவும், இருவருக்கும் இடையே சைலண்டாக கடும் போட்டிகள் நிலவி வருவதாகவும் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. தற்போது வரை விஷ்ணு விஷால் - தனுஷ் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகாத நிலையில், விரைவில் வெளியாகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.