அப்துல் கலாம் பயோபிக்கில் தனுஷ்! இயக்கப்போவது இந்த பிளாப் பட இயக்குனரா?
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ், அடுத்ததாக அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகும் கலாம் படத்தில் நடிக்க உள்ளார்.

Dhanush in APJ Abdul Kalam Biopic
இந்தியாவின் மிசைல் மேன் என அழைக்கப்படும் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றுப் படம் தயாராகிறது. இதில் கலாம் வேடத்தில் நடிகர் தனுஷ் நடிக்கிறார். 'கலாம்: தி மிசைல் மேன் ஆஃப் இந்தியா' என இப்படத்திற்கு பெயரிடப்பட்டு உள்ளது. டி-சீரிஸ் பிலிம்ஸ் சார்பில் பூஷண் குமார், கிருஷண் குமார், அபிஷேக் அகர்வால் பிலிம்ஸ் சார்பில் அபிஷேக் அகர்வால், அனில் சுங்கர் ஆகியோர் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
கலாம் பட இயக்குனர் யார்?
இப்படத்தை பாலிவுட் இயக்குனர் ஓம் ராவத் இயக்க உள்ளார். இதற்கு முன்னர் இவர் பிரபாஸ் நடித்த ஆதிபுருஷ் படத்தை இயக்கினார். அப்படம் படுதோல்வி அடைந்தது. இப்படத்தின் மூலம் கம்பேக் கொடுக்க காத்திருக்கிறார் ஓம் ராவத். கலாம் படத்தின் போஸ்டரை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் 'ராமேஸ்வரத்தில் இருந்து ராஷ்டிரபதி பவன் வரை.. ஒரு புராணக்கதையின் பயணம் தொடங்குகிறது. இந்தியாவின் ஏவுகணை நாயகன் வெள்ளித்திரைக்கு வருகிறார்.. பெரிய கனவு' என்று ஓம் ராவத் குறிப்பிட்டுள்ளார்.
தனுஷின் குபேரா
இதற்கிடையில், தனுஷின் அடுத்த படமான 'குபேரா' வருகிற ஜூன் மாதம் திரைக்கு வருகிறது. தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கும் இப்படத்தில் தனுஷுடன் நாகார்ஜுனா, ரஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப், தலீப் தஹில், தருண் அரோரா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ், அமிகோஸ் கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்களின் கீழ் சேகர் கம்முலா, சுனில் நாரங், புஷ்கர் ராம் மோகன் ராவ் ஆகியோர் படத்தைத் தயாரிக்கின்றனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
தனுஷ் கைவசம் உள்ள படங்கள்
இதுதவிர நடிகர் தனுஷ் கைவசம் இளையராஜா பயோபிக் படமும் உள்ளது. இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். மேலும் மாரி செல்வராஜ், விக்னேஷ் ராஜா, வெற்றிமாறன் ஆகியோர் இயக்கத்திலும் நடிக்க கமிட்டாகி உள்ளார் தனுஷ். இதுபோக பாலிவுட்டில் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் உருவாகி வரும் தேரே இஸ்க் மெய்ன் என்கிற இந்தி படத்திலும் நடித்து வருகிறார் தனுஷ். இது ராஞ்சனா படத்தின் இரண்டாம் பாகம் ஆகும். இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். அதேபோல் அவர் இயக்கி நடித்துள்ள இட்லி கடை படமும் வருகிற அக்டோபர் 1ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.