1 மணிநேரத்தில் 1 கோடி..! விஜய்யின் கோட்டையில் வசூல் வேட்டையாடும் சூப்பர்ஸ்டாரின் கூலி
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14ந் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அதற்கான முன்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Coolie Pre Booking Collection
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். ரஜினிகாந்த் உடன் அவர் முதன்முறையாக கூட்டணி அமைத்துள்ளதால், கூலி படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. கூலி திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார். கூலி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு வெளிநாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று கேரளாவிலும் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.
கேரளாவில் கூலி படத்துக்கு எகிறும் மவுசு
கூலி படத்திற்கு கேரளாவிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. ஏனெனில் மலையாள நடிகர் செளபின் சாஹிர் தான் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். அதுமட்டுமின்றி இப்படம் தமிழ்நாட்டில் ரிலீஸ் ஆகும் முன்னரே கேரளாவில் ரிலீஸ் ஆகிறது. தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 14ந் தேதி காலை 9 மணிக்கு தான் கூலி படத்தின் முதல் காட்சி திரையிடப்படும். ஆனால் கேரளாவில் அதிகாலை 6 மணிக்கே முதல் காட்சி திரையிடப்பட உள்ளது. இதனால் தமிழ்நாட்டை சேர்ந்த ரசிகர்களும் கேரளாவுக்கு சென்று கூலி திரைப்படத்தை பார்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கூலி டிக்கெட் முன்பதிவு தொடங்கியது
இந்த நிலையில், கூலி படத்தின் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 11 மணிக்கு கேரளாவில் தொடங்கியது. டிக்கெட் முன்பதிவு ஆரம்பம் ஆகும் முன்னரே திரையரங்குகள் முன் ரசிகர்கள் குவிந்திருந்தனர். 11 மணிக்கு டிக்கெட் விற்பனை தொடங்கியதும் ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு டிக்கெட் வாங்க விரைந்தனர். இது தொடர்பான வீடியோ காட்சியும் இணையத்தில் வெளியாகி படு வைரலாகி வருகிறது. இந்த நிலையில், டிக்கெட் விற்பனை தொடங்கிய 1 மணி நேரத்தில் 1 கோடி ரூபாய்க்கு டிக்கெட் விற்றுத் தீர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுவே கேரளாவில் அப்படத்திற்கு எவ்வளவு கிரேஷ் இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாகும்.
கேரளாவில் வசூல் வேட்டையாடும் கூலி
கேரளா நடிகர் விஜய்யின் கோட்டையாக கருதப்படும் நிலையில், சமீப காலமாக ரஜினி படங்களுக்கும் அங்கு செம ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது. ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் கேரளாவில் மட்டும் 50 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது. அதன்பின்னர் ரிலீஸ் ஆன அவரின் வேட்டையன் படம் அங்கு பெரியளவில் சோபிக்கவில்லை. அதனால் கூலி படத்தின் மூலம் தரமான கம்பேக் கொடுக்க காத்திருக்கிறார் ரஜினி. கூலி திரைப்படம் கேரளாவில் வசூல் வேட்டையாடும் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது. இருப்பினும் விஜய் படங்கள் அளவுக்கு இதற்கு ரெஸ்பான்ஸ் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.