Dhanush Divorce :ரஜினி சார்.. என் மகன் தனுஷ மருமகளோட சேர்த்து வைங்க! கண்ணீர்மல்க கோரிக்கை வைத்த சர்ச்சை தம்பதி
நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதியினர் தற்போது விவாகரத்து பெற்று பிரியப் போவதாக அறிவித்துள்ளதை அறிந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்த தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் திடீரென விவாகரத்து செய்வதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தனர். அவர்களின் இந்த அறிவிப்பு சினிமா வட்டாரத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்களது விவாகரத்துக்கான காரணம் குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. சில சர்ச்சைக்குரிய தகவல்களும் வெளிவருகின்றன தற்போது அந்த லிஸ்டில் நடிகர் தனுஷ் தனது மகன் எனக்கோரி நீதிமன்றத்தை நாடியுள்ள சர்ச்சை தம்பதியும் இணைந்துள்ளனர்.
மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதி, தங்களது மூத்த மகன் கலையரசன் 11-ம் வகுப்பு படிக்கும் போது காணாமல் போனதாகவும், அவர் தான் தற்போது தனுஷ் என பெயரை மாற்றிக்கொண்டு சினிமாவில் நடித்து வருவதாகவும், அவரை தங்களிடம் ஒப்படைக்க கோரியும் நீதிமன்றத்தை நாடி வழக்கு தொடர்ந்தனர். கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதியினர் தற்போது விவாகரத்து பெற்று பிரியப் போவதாக அறிவித்துள்ளதை அறிந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் வசித்து வரும் அவர்கள், தங்களது மகன் தனுஷும் மருமகள் ஐஸ்வர்யாவும், 2 குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சேர்ந்து வாழவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும் அவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து கதிரேசனின் மனைவி மீனாட்சி கூறும்போது, “வயதான காலத்தில் நாங்களே ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம், கலையரசா (தனுஷ்) நீ உன் பிள்ளைகள், மனைவியோடு சேர்ந்து வாழ வேண்டும் என கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.