- Home
- Cinema
- மிரட்டுறாங்க சார்... ஆக்ஷன் எடுங்க - கமிஷனர் ஆபிஸில் ‘சர்வைவர்’ உமாபதி மீது தயாரிப்பாளர் பரபரப்பு புகார்
மிரட்டுறாங்க சார்... ஆக்ஷன் எடுங்க - கமிஷனர் ஆபிஸில் ‘சர்வைவர்’ உமாபதி மீது தயாரிப்பாளர் பரபரப்பு புகார்
வேண்டுமென்றே தன்னை கஷ்டப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் உமாபதியும் (Umapathy), அவருடைய தந்தை தம்பி ராமையாவும் (Thambi Ramaiah) இணைந்து கூட்டு சதி செய்வதாக தயாரிப்பாளர் புகார் அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி குணச்சித்திர நடிகராக கலக்கி வருபவர் தம்பி ராமையா. இவரது மகன் உமாபதியும் சில படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். படங்கள் பெரிய அளவில் கைகொடுக்காததால், சமீபத்தில் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் ரசிகர்களின் மனம் கவர்ந்த போட்டியாளராக வலம் வந்த உமாபதி, இறுதிப்போட்டி வரை முன்னேறி அசத்தினார். இந்நிகழ்ச்சி மூலம் அவருக்கு புகழ் வெளிச்சம் கிடைத்தது.
இதனைப் பயன்படுத்தி அவர் நடித்த ‘தண்ணி வண்டி’ என்கிற படத்தை சமீபத்தில் வெளியிட்டனர். ஆனால் தம்பி ராமையாவும், உமாபதியும் இப்படத்தின் புரமோஷனுக்கு ஒத்துழைக்காததால் அவர்கள் மீது தயாரிப்பாளர் சரவணன் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் சரவணன் பேசும்போது, கடந்த 2015-ம் ஆண்டு ஒரு திரைப்படம் தயாரிக்க நான் உத்தேசித்து இருந்தபோது தம்பி ராமையா என்னை அணுகி, தன்னுடைய மகனான உமாபதியை நடிகராக நடிக்க வைத்தால், படத்தின் அனைத்து பொறுப்புகளையும் தானே ஏற்று அதை நல்ல முறையில் விளம்பரம் செய்து படத்தை வெற்றி பெற வைப்பதாக வாக்குறுதி அளித்திருந்தார்.
இதையடுத்து உமாபதி ராமையாவை வைத்து தண்ணி வண்டி என்கிற திரைப்படத்தை கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் ஆரம்பித்தேன். அப்படத்தை 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் நல்லபடியாக முடித்து விட்டு, ரிலீஸ் செய்வதற்காக மேற்படி ஹீரோவாக நடித்த உமாபதியை பலமுறை அழைத்தும் அவர் வரவில்லை.
வேண்டுமென்றே என்னை கஷ்டப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் உமாபதியும், அவருடைய தந்தை தம்பி ராமையாவும் இணைந்து கூட்டு சதி செய்து, திட்டமிட்டு எனது படத்தை தோல்வியாக்க வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் செயல்படுகிறார்கள். மேலும் தனக்கு தம்பி ராமையாவும், உமாபதியும் மிரட்டல் விடுத்து வருகின்றனர்’ என்று பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.