Vadivelu : இனி வெறும் வடிவேலு இல்ல ‘டாக்டர்’ வடிவேலு... வைகப்புயலுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பிப்பு
ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம் தலைமையில் செயல்பட்டு வரும் சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையம் சார்பில் வடிவேலுவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.
நகைச்சுவை உலகில் முடிசூடா மன்னனாக வலம் வந்தவர் வடிவேலு. ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், அஜித் என இவர் பணியாற்றாத முன்னணி நடிகர்கள் இல்லை என சொல்லும் அளவுக்கு திரையுலகில் இவர் ஆதிக்கம் செலுத்தி வந்தார். இடையே சில பிரச்சனைகளில் சிக்கி படங்களில் நடிக்க வடிவேலுவுக்கு தடைவிதிக்கப்பட்ட போதும் மீம்ஸ்கள் மூலம் மக்களை அன்றாடம் சிரிக்கவைத்து வந்தார் வடிவேலு. இதனால் வடிவேலுவுக்கான மவுசு மட்டும் குறையாமல் இருந்தது.
தற்போது பிரச்சனைகளெல்லாம் தீர்ந்து மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ள வடிவேலுவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. அந்த வகையில் கடந்த ஆண்டு இவர் நாயகனாக நடித்து வெளிவந்த நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் படுதோல்வியை சந்தித்ததால் சுதாரித்துக் கொண்ட வடிவேலு, தற்போது ஹீரோ வேடங்களை தவிர்த்து காமெடியனாகவும், குணச்சித்திர வேடங்களில் மட்டுமே அவர் நடித்து வருகிறார்.
இதையும் படியுங்கள்... தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகின 'பிச்சைக்காரன் 2' ரிலீஸ் தேதியை அறிவித்த விஜய் ஆண்டனி!
அந்த வகையில் தற்போது வடிவேலு கைவசம் மாமன்னன் மற்றும் சந்திரமுகி 2 ஆகிய திரைப்படங்கள் உள்ளன. இதில் மாமன்னன் திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலினுக்கு தந்தையாக நடித்து இருக்கிறார் வடிவேலு. அதேபோல் பி.வாசு இயக்கத்தில் உருவாகி வரும் சந்திரமுகி 2 படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் சேர்ந்து காமெடி கலாட்டா செய்திருக்கிறார் வடிவேலு. இந்த இரண்டு படங்களும் இந்த ஆண்டு ரிலீசாக உள்ளன.
இப்படி சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுத்து கலக்கி வரும் வடிவேலுவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டு உள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம் தலைமையில் செயல்பட்டு வரும் சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையம் சார்பில் வடிவேலுவுக்கு சிறந்த பொழுதுபோக்கு கலைஞருக்கான கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. டாக்டர் பட்டம் பெற்ற வடிவேலுவுக்கு வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளன.
இதையும் படியுங்கள்... குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறி அதிர்ச்சி கொடுத்த மணிமேகலை... வெங்கடேஷ் பத் போட்ட நெகிழ்ச்சி பதிவு!