பண மோசடியால் கைது செய்யப்பட்டாரா பிக்பாஸ் தினேஷ்; நடந்தது என்ன? வெளிவந்த உண்மை !
Bigg Boss Dinesh in Legal Trouble over Money Scam: பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் போட்டியாளரும், சீரியல் நடிகருமான தினேஷ் கோபால்சாமி பண மோசடி புகார் குறித்து தற்போது விளக்கம் கொடுத்துள்ளார்.

தினேஷ் கோபாலசாமி:
விஜய் டிவி பல புதுமுகங்களை அறிமுகப்படுத்தி, வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் பிரபலமான நடிகர்களாக மாற்றி உள்ளது. அந்த வகையில் கடந்த 2010-ஆம் ஆண்டு 'மஹான்' என்கிற சீரியல் மூலம் அறிமுகமானவர் தான் தினேஷ் கோபால்சாமி. இதை தொடர்ந்து 2011-ஆம் ஆண்டு 'பிரிவோம் சந்திப்போம்' சீரியலில் நடித்தார். இந்த சீரியலில் நடித்த போது, தனக்கு ஜோடியாக நடித்து வந்த பெங்களூரை சேர்ந்த கன்னட சீரியல் நடிகை ரட்சிதாவை காதலித்து, பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
தினேஷ் நடித்த சீரியல்கள்:
திருமணத்திற்கு பின்னரும், கணவன் - மனைவி இருவருமே சின்னத்திரையில் கவனம் செலுத்திக்கொண்டே, வெள்ளித்திரை வாய்ப்புகளை தேடி வந்தனர். குறிப்பாக தினேஷ், புதுக்கவிதை, பூவே பூச்சூடவா, செம்மருதி, நாச்சியார்புரம், ஈரமான ரோஜாவே 2, கார்த்திகை தீபம், போன்ற பல சீரியல்களில் நடித்தார்.
தினேஷ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காரணம்:
கடைசியாக விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கிழக்கு வாசல்' தொடரில் நடித்துக்கொண்டிருந்தபோது தான், 'பிக்பாஸ் சீசன் 7' நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சியில் தினேஷ் கலந்துகொள்ள முக்கிய காரணம், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருக்கும் தன்னுடைய மனைவி ரட்சிதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என்பதே. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பலமுறை மனம் வருந்தி மன்னிப்பு கேட்டபோதும் ரட்சிதா மனம் இறங்கவில்லை.
தினேஷ் மீது கொடுக்கப்பட்ட புகார்.
தற்போது இவர்களின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான். நடிகர் தினேஷ் கோபால்சாமி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டதாக ஒரு தகவல் நேற்று வெளியானது. திருநெல்வேலி மாவட்டம், பணகுடியைச் சேர்ந்த கருணாநிதி என்பவர் தினேஷ் மீது காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகார் மனுவில், "தன்னுடைய மனைவிக்கு மின்வாரியத்தில் (TNEB) வேலை வாங்கித் தருவதாகக் கூறி, நடிகர் தினேஷ் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ரூ.3 லட்சம் பெற்றதாகவும்... ஆனால், அவர் வேலை வாங்கித் தரவில்லை. அதே போல் பணத்தைத் திரும்பக் கொடுக்காமல் தொடர்ந்து ஏமாற்றி வருகிறார். பணம் கேட்டு சென்றபோது, அந்த பெண்ணின் அப்பாவை தாக்கியதாக புகாரில் கூறப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் தற்போது பணகுடி போலீசார், தினேஷ் மீது வழக்குப் பதிவு செய்து தினேஷை விசாரித்து வந்தநிலையில்... கைது செய்ததாகவும் கூறப்பட்டது.
தினேஷ் கொடுத்த விளக்கம்:
தற்போது இந்த சர்ச்சைக்கு தினேஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் கொடுத்துள்ளார். "அதாவது தன் மீது பொய் வழக்கு போடப்பட்டு இருக்கிறது எனவும், காவலர்கள் என்னை விசாரணைக்காக தான் அழைத்து சென்றார்கள் என் மீது எந்த தவறும் இல்லை என ஆதாரத்துடன் தெரிவித்தேன். நான் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவல் முற்றிலும் வதந்தி என கூறியுள்ளார்.