சுஷாந்த் சிங்கின் மரணம்... தற்கொலை அல்ல கொலை - இரண்டரை ஆண்டுகளுக்கு பின் வெளிவந்த அதிர்ச்சி தகவல்
பாலிவுட் நடிகர் மரணமடைந்து இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் ஆகும் நிலையில், தற்போது அவர் தற்கொலை செய்துகொள்ளவில்லை கொலை செய்யப்பட்டுள்ளார் என்று ஒருவர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் மும்பையில் உள்ள அவரது வீட்டில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். அவரது மரணம் பாலிவுட்டை உலுக்கியது. அவர் மரணமடைந்து இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் அவர் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது புரியாத புதிராகவே உள்ளது.
அவரது மரணம் தொடர்பாக விசாரணை ஒரு பக்கம் நடந்து வரும் நிலையில், தற்போது சுஷாந்த் சிங்கின் மரணம் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அவரின் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்த ரூப்குமார் என்பவர் சுஷாந்த் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும், அவர் கொலை செய்யப்பட்டதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
இதுகுறித்து ரூப்குமார் கூறுகையில், "சுஷாந்த் சிங் இறந்தபோது, 5 உடல்கள் மும்பையில் உள்ள கூப்பர் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு வரப்பட்டன. அதில் ஒன்று விஐபி சடலம் என்றனர். பிரேத பரிசோதனைக்கு சென்றபோது தான் அது சுஷாந்த் சிங்கின் உடல் என்பது தெரிய வந்தது. அவரது உடலில் பல அடையாளங்கள் மற்றும் கழுத்தில் இரண்டு முதல் மூன்று இடங்களில் காயங்கள் இருந்தன,
இதையும் படியுங்கள்... நயன்தாரா புரமோஷன் செஞ்சும் வேலைக்கு ஆகல... கனெக்ட் படத்தின் 4 நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் இவ்வளவுதானா..!
உடற்கூராய்வு முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும், ஆனால் உயர் அதிகாரிகள் புகைப்படங்கள் மட்டும் எடுக்கச் சொன்னார்கள். அதனால் நாங்களும் அப்படியே செய்தோம். சுஷாந்தின் உடலை பார்த்ததும், இது தற்கொலை அல்ல, கொலை என்று என்னுடைய சீனியர்களிடம் சொன்னேன். ஆனால், அவர்கள் அதை கண்டுகொள்ளாமல் போட்டோ மட்டும் எடு என சொன்னார்கள். பின்னர் உடலை போலீஸிடம் ஒப்படைத்தோம்” என அவர் கூறினார்.
ரூப்குமார் சொல்வது உண்மையாக இருந்தால், சுஷாந்தை கொன்றது யார், அதற்கு என்ன காரணம் என்கிற கேள்வி தான் உடனடியாக எழுகிறது. இதுகுறித்து போலீசார் ரூப்குமாரிடம் மேற்கொண்டு விசாரணை நடத்துவார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ரூப்குமார் வெளியிட்ட தகவல்களால் தற்போது சுஷாந்த் சிங் மரணம் குறித்த விவாதம் பாலிவுட்டில் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
இதையும் படியுங்கள்... இது ஃபேமிலி டைம்... ஃபாம் ஹவுசில் குடும்பத்தோடு குதூகலம் பண்ணும் பிரகாஷ் ராஜ்! வைரலாகும் போட்டோஸ்!