முதன்முறையாக ரிலீசுக்கு முன்பே போனி ஆன அருண்விஜய் படம்... ஒரே ஒரு டீசரை வைத்தே டீல் பேசி முடித்த யானை படக்குழு
தமிழ் திரையுலகில் 25 ஆண்டுகளுக்கு மேல் நடித்து வரும் அருண் விஜய்யின் படம் ஒன்று ரிலீஸுக்கு முன்னரே வியாபாரம் ஆவது இதுதான் முதல் முறை என கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான ஹரி (Hari) இயக்கத்தில் கடைசியாக விக்ரம் நடித்த சாமி 2 திரைப்படம் 2018ம் ஆண்டு வெளியானது. அதன் பின்னர் சூர்யா - ஹரி கூட்டணி 6வது முறையாக ஒன்றிணையவிருந்த 'அருவா' படம் குறித்த அறிவிப்புகள் வெளியாகின. படப்பிடிப்பு தொடங்க இருந்த சமயத்தில் சில பிரச்சனைகள் ஏற்பட்டதால், அப்படைத்தை கைவிட்டனர்.
தற்போது சினிமாவில் நிலையான இடத்தை பிடித்து விட்ட, தனது மனைவி ப்ரீத்தாவின் அண்ணனான அருண் விஜய்யை (Arun Vijay) ஹீரோவாக வைத்து ஆக்ஷன் கதை ஒன்றை இயக்கி உள்ளார் இயக்குனர் ஹரி. கிராமத்து கதையம்சம் கலந்து, ஆக்ஷன் படமாக இப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.
யானை படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தை அடுத்த மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் மற்றும் பாடலுக்கு அமோக வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில், யானை (yaanai) படத்தின் வியாபாரம் தற்போது தொடங்கியுள்ளது. அதன்படி தியேட்டர் ரிலீசுக்கு பிந்தைய இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமம் மற்றும் ஓடிடி ரிலீஸ் உரிமையை ஜீ நெட்வொர்க் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழ் திரையுலகில் 25 ஆண்டுகளுக்கு மேல் நடித்து வரும் அருண் விஜய்யின் படம் ஒன்று ரிலீஸுக்கு முன்னரே வியாபாரம் ஆவது இதுதான் முதல் முறை என கூறப்படுகிறது. விரைவில் இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.