Valimai Track List: அதிரடி சரவெடி.. 'வலிமை' படத்தின் ட்ராக் லிஸ்டை வெளியிட்ட படக்குழு!
அஜித் நடித்து முடித்துள்ள, 'வலிமை' (Valimai Movie) திரைப்படம் இந்த வருட பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில்... 'வலிமை' படம் குறித்த அடுத்தடுத்த தகவலை படக்குழு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது வலிமை படத்தின் ட்ராக் லிஸ்டை வெளியிட்டு அஜித் ரசிகர்களை உச்சாக படுத்தியுள்ளது படக்குழு.

'நேர்கொண்ட பார்வை' (Nerkonda Paarvai) படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பின்னர், மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் 2-வது முறையாக நடித்து முடித்துள்ள வலிமை படத்தின் ரிலீசுக்காக அஜித்தின் ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கிறார்கள்.
கடந்த இரண்டு வருடமாகவே இந்த படத்தின் அப்டேட் மற்றும் ரிலீஸ் குறித்த தகவலுக்கு காத்திருக்கும் ரசிகர்களுக்கு, அடுத்தடுத்து விருந்து வைப்பது போன்ற தகவல்களை படக்குழுவும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் ஏற்கனவே இந்த படத்தின் புகைப்படங்கள், ரேஸிங் காட்சிகள், கிளம்சி வீடியோ, மேக்கிங் வீடியோ, லிரிக்கல் பாடல்கள், ட்ரைலர் என அனைத்துமே வேற லெவலில் இருந்தது.
குறிப்பாக, 'வலிமை' படத்தில் இடம்பெற்றிருந்த ரேஸிங் காட்சிகள் ஒவ்வொன்றும் ஹாலிவுட் தரத்தில் இருந்ததாக ரசிகர்கள் தங்களுடைய கருத்தை தெரிவித்து வந்தனர்.
ஏற்கனவே தீபாவளிக்கு 'வலிமை' திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 'அண்ணாத்த' படத்தின் வருகையால் தள்ளி போனது. இதை தொடர்ந்து தற்போது பொங்கலுக்கு இப்படம் வெளியாக உள்ளது.
50 சதவீத பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டால் படத்தை வெளியிட்டே தீர வேண்டும் என்கிற முனைப்போடு இருக்கிறது படக்குழு.
இந்நிலையில் இன்று இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களின் ட்ராக் லிஸ்ட் வெளியாகும் என படக்குழு தெரிவித்திருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ளது.
இதில் மொத்தம் 3 பாடல்கள் இடம்பெற்றுள்ளது... விக்னேஷ் சிவன் பாடல் வரிகளில் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் அனுராக் குல்கர்னி பாடிய... 'நாங்க வேற மாறி பாடல்' முதல் பாடலாக இடம் பெற்றுள்ளது. இதை தொடர்ந்து இரண்டாவது பாடலாக விக்னேஷ் சிவன் பாடல் வரிகளில் சித் ஸ்ரீராம் பாடியுள்ள அம்மா பாடலும், விசில் தீம் ஆகியவை இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.