தல போல வருமா! பீனிக்ஸ் பறவையை மிஞ்சும் அஜித்தின் கதை ஒரு பார்வை
நடிகர் அஜித் குமார் இன்று தனது 54-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில், அவரைப் பற்றிய ஒரு சிறப்பு தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

Happy Birthday Ajith kumar : சினிமா பின்புலம் இல்லாமல் திரையுலகில் காலடி எடுத்து வைத்தவர் அஜித். 1993-ம் ஆண்டு அமராவதி படம் மூலம் அறிமுகமான அஜித்துக்கு தமிழ் சினிமா முதல் படத்திலேயே சிவப்பு கம்பலம் விரித்துவிடவில்லை. நிச்சயம் ஒரு நாள் சாதித்துக் காட்டுவேன் என வைராக்கியத்துடன் போராடிய அஜித்துக்கு ஆசை படம் தான் வெற்றியின் ஆரம்பப் புள்ளியாக மாறியது. அன்றுமுதல் அஜித், ரசிகர்களிடையே ஆசை நாயகனாக மாறினார்.
அஜித்
ஆசை நாயகன் அஜித்
ஆசை, காதல் கோட்டை என கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிய அஜித்திற்கு காதல் மன்னன், வாலி, தீனா போன்ற திரைப்படங்கள் மாபெரும் நட்சத்திர அந்தஸ்தை பெற்றுத் தந்தன. இந்த நடிகர்க்குள் இப்படி ஒரு திறமையா என விமர்சகர்களும் அவரை கொண்டாடித் தீர்த்தார்கள். இன்னொரு பக்கம் தமிழகத்தில் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமும் உருவாக தொடங்கியது. தொடர்ந்து சிட்டிசன், வில்லன் என அடுத்தடுத்து பல வெற்றிப் படங்களை கொடுத்த அஜித், எம்.ஜி.ஆர், ரஜினி வரிசையில் தமிழ் சினிமாவின் அடுத்த வசூல் சக்கரவர்த்தியாக உருவெடுத்தார்.
அஜித் குமார்
அஜித் சந்தித்த சறுக்கல்கள்
எனினும் அதே வேகத்தில் அஜித்தின் திரைப் பயணம் சறுக்கலையும் சந்தித்தது. தொடர் தோல்விகள், கார் ரேஸிங்கில் கூடுதல் கவனம், அதில் ஏற்பட்ட விபத்தில் உடலில் ஆபரேஷன், அதனால் உடல் எடை அதிகரித்து பொழிவிழந்த தோற்றத்துடன் மாறியது என 2003-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு இடையிலான காலகட்டம் அஜித்துக்கும், அவருடைய ரசிகர்களுக்கும் சோதனைக் காலமாக அமைந்தது.
அஜித் விண்டேஜ் போட்டோ
பீனிக்ஸ் பறவை போல் மீண்டு வந்த அஜித்
எனினும் ஒவ்வொரு முறை வீழும் போதும் பீனிக்ஸ் பறவை போல மீண்டு வந்து, முன்பு இருந்ததைவிட பெரிய ஹிட் கொடுப்பது அஜித்தின் ஸ்டைல். அந்த வகையில் 2007-ம் ஆண்டு பில்லா திரைப்படம் மூலம் அதிரடியாக கம்பேக் கொடுத்து, தான் விட்டுச் சென்ற சிம்மாசனத்தில் மீண்டும் ஒரு வேதாளமாய் ஏறி அமர்ந்தார். திரைத்துறையில் எந்தவித பின்புலமும் இன்றி அறிமுகமாகி தனது விடாமுயற்சியால் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கி தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சக்தியாக மாறி உள்ளார் அஜித். தமிழ் சினிமா உள்ளவரை அஜித் எனும் வலிமை நாயகனின் பெயர் நிலைத்திருக்கும்.
அஜித்தின் அரிய புகைப்படம்
அஜித் பிறந்தநாள்
ஒரு நடிகர் மீது ஏன் இவ்வளவு அன்பு என கேட்கும் அளவுக்கு அஜித்தின் ரசிகர் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. காரணம், அவர் பைக் ரேஸர், கார் ரேஸர், மாஸாக நடிக்கிறார் என்பதையெல்லாம் தாண்டி, ஒரு வேளை அவர் நடிப்பதை நிறுத்திவிட்டாலும் அவரது ரசிகர்கள் கூட்டத்தில் இருந்து அவரது ரசிகர்கள் இடம்பெயர்ந்துவிட மாட்டார்கள் என்பதே நிதர்சனமான உண்மை. உழைப்பாளர் தினத்தில் பிறந்ததாலோ என்னவோ, உழைப்பாளிகளுக்கு முன் உதாரணமாக திகழ்கிறார் அஜித். இன்றைக்கு அவர் தன்னுடைய 54-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி சமூக வலைதளங்களில் அஜித்துக்கு வாழ்த்து மழை பொழிகிறது.