மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல்... ஆர்.கே.செல்வமணியின் கார் கண்ணாடி உடைப்பு - போலீசார் தீவிர விசாரணை
ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் சிலர் கல்வீசி தாக்கியதில் இயக்குனர் அர்.கே.செல்வமணியின் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் ஆர்.கே.செல்வமணி. நடிகை ரோஜாவின் கணவரான இவர் தற்போது இயக்குனர் சங்கம் மற்றும் தமிழ் திரைப்படம் தொழிலாளர்கள் சம்மேளனமான ஃபெப்சியின் தலைவராகவும் இருந்து வருகிறார். வேலை நிமித்தமாக சென்னை சாலிகிராமத்தில் உள்ள கண்ணம்மாள் தெருவுக்கு சென்ற செல்வமணி, அங்கு தனது இன்னோவா காரை நிறுத்திவிட்டு அருகில் இருந்த இடத்துக்கு நடந்து சென்றுள்ளார்.
பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது அவரது கார் கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த செல்வமணி, இதுகுறித்து அருகில் இருந்தவர்களிடம் விசாரித்த போது, ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் சிலர் கல்வீசி கார் கண்ணாடியை உடைத்தது தெரியவந்துள்ளது. உடனடியாக சென்னை விருகம்பாக்கம் காவல்நிலையத்துக்கு சென்ற அவர், அங்கு இதுகுறித்து புகார் அளித்துள்ளார்.
இதையும் படியுங்கள்... பிக்பாஸ் 6-ல் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த சம்பவம் நடக்கப்போகுது... இந்த வாரம் வெளியேறப்போவது யார் தெரியுமா?
அவரின் புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணையை தொடங்கி உள்ளனர். ஆர்.கே.செல்வமணி ஃபெப்ஸி தலைவராகவும் இருப்பதால் முன் விரோதம் காரணமாக அவரின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதா என்கிற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படியுங்கள்... ரிலீசாகி ஒரு வாரம் தான் ஆகுது... அதற்குள் இப்படியா..! பரிதாப நிலையில் சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’